மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம்: நாகர்கோவிலில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பங்கேற்பு
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக தேசிய அளவிலான இயக்கத்தை மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தொடங்கியுள்ளது. முக அடையாள தொழில்நுட்பத்தை மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர், ஓய்வூதியத்தை வழங்கும் வங்கிகள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசின் சுகாதாரத் திட்ட மையங்கள் போன்றவை டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ், முக அடையாள தொழில்நுட்ப முறை போன்றவை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் வகையில், இந்த தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்த சிறப்பு முகாம்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இன்று (நவம்பர்-15) ஸ்டேட் வங்கி மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கம் இணைந்து இது தொடர்பான முகாமை நடத்தின. இதில் பணியாளர் நலத்துறையின் சார்பு செயலாளர் திரு தீபக் பந்திர் தலைமையிலான குழு பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியை பாரத ஸ்டேட் வங்கியை மண்டல மேலாளர் கே ஜி பழனிசாமி, பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் சங்கத் தலைவர் திரு ஜோன்ஸ் ரவீந்திரன், தனித்துவ அடையாள ஆணையத்தின் திட்ட மேலாளர் திரு நவ்ஷத் ஆகியோர் தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
இந்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் விழிப்புணர்வு முகாமில் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர், 80 வயதை கடந்தவர்களாக இருந்தனர். இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு அவர்கள் மகிழ்சியை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான, விழிப்புணர்வு முகாம்கள் நவம்பர் மாதம் முழுதும் பல்வேறு இடங்களில் பணியாளர் நலத்துறையால் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய பணியாளர் நலத்துறையின் அதிகார பூர்வ யூடியூப் சேனல் DOPPW_INDIA OFFICIAL-ஐ பார்க்கலாம் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முக அடையாள தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தது தொடர்பாக இந்த யூடியூப் அலைவரிசையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எளிய முறையில் புரிந்துகொள்ளும் வகையில், இரண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்