இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்- எஸ் நாளை (நவம்பர் 18) காலை விண்ணில் செலுத்தப்படுகிறது
இந்திய தனியார் விண்வெளித் துறையின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை (நவம்பர் 18, 2022) விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி முகாமையான இன்-ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) இதற்கான அங்கீகாரத்தை வழங்கியதை
அடுத்து, ஐதராபாத்தைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள இந்த ராக்கெட் நாளை காலை மணி 11- நண்பகல் மணி 12 இடையே விண்ணில் செலுத்தப்படும்..
‘பிராரம்ப்’ திட்டத்தின்கீழ் தனியார் துறையினரால் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டை ஸ்கைரூட் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிலிருந்து விண்ணிற்கு அனுப்புகிறது. முப்பரிமாண அச்சு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய மூன்று செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பவன் கே. கோயங்கா, “விண்வெளி துறையை ஊக்குவிக்கவும், தனியார் துறையினரின் பங்களிப்பிற்கு ஏதுவாகவும், அரசு மேற்கொண்டு வரும் கொள்கைகளின் காரணமாக இந்திய விண்வெளித் துறை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் வகையில் ஸ்கைரூட் நிறுவனத்தின் முதல் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது”, என்று கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில், இந்தியாவில் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசு அல்லாத நான்கு அமைப்புகளுக்கு இன்-ஸ்பேஸ் நிறுவனம் அதிகாரம் அளித்துள்ளது. விண்வெளி பணிகளில் ஈடுபடுவதற்காக இந்தத் துறை சார்ந்த அரசு அல்லாத அமைப்புகளிடமிருந்து இன்-ஸ்பேஸ் நிறுவனத்திற்கு இதுவரை 150 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
கருத்துகள்