கர்நாடகாவில் வருமான வரித்துறையினர் சோதனை
கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மேற்கொண்ட கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் தொடர்பாக, கடந்த அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு, மும்பை மற்றும் கோவாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில், மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள், அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள், ஒப்பந்த ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வீட்டின் புதிய உரிமையாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், வீட்டில் குடியேறுவதற்கான சான்றிதழ் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் மூலம் நிலத்தை விற்பனை செய்திருப்பதையும், இதன் மூலம் பெற்ற வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்திருப்பதையும் இந்த ஆவணங்கள் உறுதி செய்துள்ளன.
பல ஆண்டுகளாக நில உரிமையாளர்கள் வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்திருப்பதும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.1,300 கோடி மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது ரூ.24 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள்