பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் நாட்டின் 197 மாவட்டங்களில் டிசம்பர் 12-ல் நடத்தப்படுகிறது 197 மாவட்டங்களை உள்ளடக்கியதாக 25 மாநிலங்களில் இந்த தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் நடைபெறும்
இந்த முகாம்களில் பங்கேற்று இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன
திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் முகாம்களை (PMNAM) டிசம்பர் 12, 2022 அன்று நடத்தவுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 197 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பல உள்ளூர் நிறுவனங்கள் இந்தப் பழகுநர் முகாம்களில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்கும் வாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கும். இந்த முகாம்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரே தளத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் பயிற்சியாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளன. அத்துடன் விண்ணப்பதாரர்களை உடனடியாக அந்த இடத்திலேயே தேர்வு செய்து, தங்களது நிறுவனத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பை அவர்களுக்கு அந்த நிறுவனங்கள் வழங்கும்.
இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் தனிநபர் பயிற்சியாளர்கள், https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு அதன் மூலம் இந்த முகாம்களில் பங்கேற்கப் பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் அருகில் இந்த முகாம் நடைபெறும் இடத்தையும் கண்டறியலாம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இந்த தொழில் பழகுநர் பயிற்சி முகாம்களில் பங்கேற்று நிறுவனங்களில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் மூன்று நகல்கள், அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்கள், புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை) மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சம்பந்தப்பட்ட முகாம்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கெனவே பதிவுசெய்தவர்கள், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த முகாம்களின் மூலம், விண்ணப்பதாரர்கள் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCVET) அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பெறுவார்கள். பயிற்சிக்குப் பிறகு அவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்படும்.
பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம் குறித்து திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு. அதுல் குமார் திவாரி கூறுகையில், “இன்றைய இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வாய்ப்புகளின் அடிப்படையில் இந்தியா பெரும்பாலும் மற்ற வளர்ந்த பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. இதில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பயிற்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கடினமாக உழைக்கவும், நமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க உதவவும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து கடந்த மாத பயிற்சி முகாம்களின் போது எங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், நிறுவனங்கள், அதிக பயிற்சியாளர்களை பணி அமர்த்துவதை ஊக்குவிப்பதாகும். அதே நேரத்தில் திறன் மிக்க நபர்களைக் கண்டறியவும், பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவத்தின் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தவும் நிறுவன உரிமையாளர்களுக்கு உதவுவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும். தொழிற்பயிற்சியிலிருந்து உயர்கல்வி வரை நம்பகமான வாய்ப்புகளை உருவாக்குவது ஒரு புறம் இருக்க, கல்விச் சூழலில் தொழிற்பயிற்சியை இணைப்பது முக்கியமானது. தொடர் முயற்சிகளின் மூலம், 2022-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை 10 லட்சமாகவும், 2026-ம் ஆண்டுக்குள் 60 லட்சமாகவும் உயர்த்துவதே எங்கள் இலக்கு.” என்று தெரிவித்தார்.
இந்தத் தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன, இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் புதிய திறன்களைப் பெறுவதுடன் அரசு நிர்ணயித்த அளவின்படி மாதாந்திர உதவித்தொகையையும் பெறுகிறார்கள். தொழிற்பயிற்சியானது திறன் மேம்பாட்டின் நிலையான மாதிரியாகக் கருதப்படுவதுடன் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது.
தொழிற்பயிற்சி பயிற்சி மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்த பணியை நிறைவேற்ற, நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் முகாம் (PMNAM) ஒரு முக்கியத் தளமாக பயன்படுத்தப்படுகிறது. பங்கேற்கும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு இது விழிப்புணர்வை அளிக்கிறது
கருத்துகள்