2022-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் சாதனைகள், ஒரு பார்வை
2022 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை மேற்கொண்ட முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் பணியில் திறம்பட செயல்பட்டவர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் டிசம்பர் 3-ஆம் தேதி வழங்கினார்.
விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு இத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், ‘சைகை மொழி நம்மை இணைக்கிறது', என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் 3200 இடங்களில் சைகை மொழி தினத்தை செப்டம்பர் 23-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடியது.
புதுதில்லி கடமைப் பாதையில் டிசம்பர் 2 முதல் 7 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரம்மாண்டமான கண்காட்சி நடைபெற்றது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் இந்தக் கண்காட்சியில் தங்களது பொருட்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தினார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள், முன்முயற்சிகள் பற்றி மாநில நிர்வாகிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பயிலரங்கம் மார்ச் மாதம் இந்தோர் மற்றும் கெவாடியாவில் நடைபெற்றது. இரண்டு நாள் முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் ஐந்தாவது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. இணையமைச்சர் திருமதி பிரதிமா பௌமிக், 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மின்னணு வர்த்தக துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பளிப்பதற்காக முதன்முறையாக, முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
கோழிக்கோடில் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான மண்டல மையத்தின் பிரதான கட்டிடத்தை கடந்த ஜனவரி மாதம் காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல கர்நாடக மாநிலம் தேவனகிரியிலும், சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கவுனிலும் இத்தகைய மண்டல மையங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவர் அடிக்கல் நாட்டினார்.
கருத்துகள்