இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ அம்சங்கள் குறித்து விவாதிக்க ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது
இந்தியாவின் ஜி 20 கூட்டமைப்பு தலைமைத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலான கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாடு முழுவதற்கும் சொந்தமானது என்றும், நாட்டின் பலத்தை வெளிப்படுத்த இது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் கூறினார்.
குழுவாகக் கூட்டுப் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். மேலும் ஜி 20 தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புத் தேவை என அவர் கூறினார். இந்தியாவின் இந்த ஜி 20 தலைமைத்துவம் பெருநகரங்களை மட்டும் அல்லாமல் அதற்கு அப்பால் இந்தியாவின் பல பகுதிகளின் சிறப்புகளை வெளிப்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவத்தையும் உலகுக்கு வெளிக்கொணர முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஜி 20 தலைமைத்துவத்தின் போது ஏராளமான பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகத்தினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியாவுக்கு வரவுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அப்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வணிகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறைகளில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டியது முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜி 20 தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பை, முழுமையான அரசுமுறை மற்றும் முழு சமூக அணுகுமுறை மூலம் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் கூட்டத்தின் போது தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்களைத் தகுந்த முறையில் நடத்துவதற்கு மாநிலங்கள் செய்து வரும் ஏற்பாடுகளை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கரும் உரையாற்றினார், மேலும் இந்தியாவின் ஜி20 ஏற்பாட்டு அதிகாரி (ஷெர்பா) ஜி 20 தொடர்பான விளக்கக்காட்சியை இக்கூட்டத்தின்போது வழங்கினார்.
கருத்துகள்