ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய கணினி ஆய்வகத்தை மத்திய அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய கணினி ஆய்வகம், பணியாளர் குடியிருப்பு மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட வாயில் முகப்பு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில் பிரதமரின் தொலை நோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து வருவதை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பாராட்டினார்.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகம் 75 லட்சம் ரூபாயில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய துறைசார் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதேபோல 398 கோடி ரூபாயில் 1873 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பு பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மையத்தின் இயக்குநர் திரு சிப்நாத் தேவ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவல் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. தியாகராஜன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்