கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் பெங்களூரில் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது காவல்துறை வண்டி வருகிறது.
இருவரின் அடையாளாட்டை கேட்கிறார்கள், செல்லுலர் தொலைபேசியிலிருக்கும் ஆதார் அட்டைகளைக் காட்டிய நிலையில் அதை பறித்துக்கொண்டனர் மேலும்
இரவு 11 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது, இந்தப் பெண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு என்றெல்லாம் கேள்விகள் சரமாரியாக எழுப்புகின்றனர்.
தாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை என்றும், இரவு 11 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என்பது தங்களுக்குத் தெரியாதென்றும், இனி அவ்வாறு வரமாட்டோம் என்றும் உறுதி சொல்கிறார்.
உன்னைய மாதிரி படிச்சவங்க இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கனும், ரூபாய் 3000 அபராதம் கட்டு என்று அடுத்ததாக சலான் புத்தகம் எடுக்கிறார் காவலர். கட்டாவிட்டால் ஜெயில் கன்பர்ம் என்றும் பயம் காட்டப்பட்டதாம்.
மனைவி பயந்துபோய் அழ ஆரம்பிக்கும் போது, தான் பெரிய சிக்கலில் மாட்டி இருப்பதை உணர்ந்து ரூபாய் 1000 உள்ளது என்று பேரம் பேசி, பே டி எம் எண் கொடுக்கப்பட்டு அதில் பணத்தை செலுத்திவிட்டு, இனி இன்னொரு முறை உங்கள் இருவரையும் 11 மணிக்கு மேல் பார்த்தால் பெரிய கேஸ் போட்டு உள்ளே தள்ளுவோம் என்ற எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
மன உளைச்சலில் இருந்தவர் அதைப் பற்றி அவரது டிவிட்டரில் பதிவு செய்த நிலையில் அது வைரலாகி, கர்நாடகா உயர் காவல்துறை அதிகாரிகள் பார்வைக்கு வரவே அந்தக் காவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவருடைய அந்த டிவிட்டர் பதிவிலேயே கீழ் கர்நாடக காவல்துறை உயரதிகாரிகள் விளக்கமளித்து நடவடிக்கைக்கு உறுதி அளித்ததை நிறைவேற்றியுமிருக்கிறார்கள்.
கருத்துகள்