தி.மு.க. வின் சிறுபான்மையினர் நல உரிமைகள் பிரிவின் மாநிலச் செயலாளரும், தமிழ்நாடு சிறுபான்மையர் நல வாரிய துணைத் தலைவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் .
டாக்டர் மஸ்தான் சென்னையிலிருந்து காரில் கூடுவாஞ்சேரி சென்று கொண்டிருந்த நிலையில் . அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்ற
போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு நோய் வந்ததாகவும் கூறி அவரை கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டாரென்றும் டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் அன்று மாலை நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாம்,
அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தகவலறிந்ததும் தி.மு.க. வின் நிர்வாகிகள் விரைந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட பலர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் தற்போது வரும் தகவல் வேறுவிதமாக உள்ளன கைக்குட்டையை வாயில் திணித்து கொலை செய்யப்பட்டதாக வெளியான வாக்குமூலம். தற்போது அதிர்ச்சியை உருவாக்கியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மஸ்தான் மரணம் கொலை வழக்காகப் பதியப்பட்டு ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடுவாஞ்சேரி பகுதியில் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி காரில் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்பட்டது.
டாக்டர் மஸ்தானின் மகன் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், மருத்துவமனையில் என்னுடைய அப்பா மஸ்தானைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
அதன் படி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டனர். விசாரணையில் மஸ்தான் இறப்பில் சந்தேகம் இருப்பது தெரிந்ததையடுத்து அமைக்கபட்ட தனிப்படைக் காவல்துறையினர் மஸ்தானுடன் காரில் பயணித்த அவர் மருமகன் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தனர்.
டாக்டர் மஸ்தான் மாரடைப்பு காரணமாகவே இறந்தார் என்ற இம்ரான்பாஷா கூற, மஸ்தானின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த தகவலில் மஸ்தான் மூச்சுத் திணறி இறந்தார் எனத் தெரியவந்தது.
அதனால் இம்ரான் பாஷாவின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகளை தனிப்படைக் காவல்துறையினர் இரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர். தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று மஸ்தானின் காரைப் பின்தொடர்ந்து மற்றோரு காரும் சென்றது தெரியவந்தது.
திடீரென இரண்டு கார்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தப்பகுதியில் இருந்த செல்போன்களின் சிக்னலைக் கண்காணித்தனர். அப்போது மஸ்தான் பயணித்த காரில் இம்ரான் பாஷாவைத் தவிர மேலும் இரண்டு பேர் காரில் சென்றதும்,
அவர்கள் குறித்து விசாரித்தபோது இம்ரான் பாஷாவின் சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது, அவரின் நண்பர் நஷீர் எனவும் தெரியவந்த நிலையில் அவர்களிடம் விசாரித்த போது 15 லட்சம் ரூபாய் பணத்துக்காக மஸ்தானை இம்ரான் பாஷா கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறும் போது ``திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானிடம் இம்ரான் பாஷா சிறுகச் சிறுக 15 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கியிருக்கிறார். தன்னுடைய மகன் ஷாநவாஸின் திருமணச் செலவுக்காக மஸ்தான், கடனாகக் கொடுத்த பணத்தை மருமகன் இம்ரான் பாஷாவிடம் கேட்டிருக்கிறார். பணத்தை திரும்பக் கொடுக்க விரும்பாத இம்ரான் பாஷா, மஸ்தானைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவருடைய உறவினர்கள் சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன், ஆகியோருடன் சேர்ந்து சம்பவத்தன்று ஃபைனான்ஸியர் ஒருவரிடம் பணம் வாங்கித் தருவதாகக் கூறி மஸ்தானைக் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது மஸ்தானின் காரை இம்ரான் பாஷா ஓட்டியிருக்கிறார். அந்தக் காரில் தமீம், நஷீர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள். மஸ்தான் சென்ற காரைப் பின்தொடர்ந்து மற்றொரு சொகுசுக் காரும் சென்றிருக்கிறது. அதில் தௌபிக் அகமதுவும் லோகேஸ்வரனும் வந்திருக்கிறார்கள். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய இம்ரான் பாஷா, மஸ்தானின் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த நஷீருக்கும் தமீமுக்கும் கண்ணால் சைகை கொடுத்திருக்க உடனே நஷீர், மஸ்தானின் கைகளைப் பின்புறமாக பிடித்திருக்கிறான். அடுத்து மஸ்தானின் வாய், மூக்கை சுல்தான் பிடித்து அவரை மூச்சுவிடாமல் அழுத்தியிருக்கிறான். அப்போது மற்றொரு காரில் வந்த தௌபிக், லோகேஸ்வர் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து மஸ்தான் சத்தம் போடமிலிருக்க கைக்குட்டையை அவர் வாய்க்குள் திணித்திருக்கிறார்கள். அதனால் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.
மஸ்தான் இறந்ததும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததைப் போல நடித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நபருடன் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருக்கிறோம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்