எகிப்து அதிபரின் இந்தியப் பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம்
மேன்மை தங்கிய அதிபர் சிசி அவர்களே,
இரு நாடுகளின் அமைச்சர்களே, பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
முதற்கண் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அதிபர் சிசி மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு நான் அன்பான வரவேற்பை அளிக்க விரும்புகிறேன். நாளை நடைபெறும் நமது குடியரசு தின விழாவில் அதிபர் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது இந்தியா முழுமைக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொண்ட விஷயமாகும். எகிப்தை சேர்ந்த ராணுவ அணியினரும், நமது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று அதற்கு புகழ் சேர்ப்பது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
உலகின் தொன்மையான நாகரீகங்களில் இந்தியாவும், எகிப்தும் இடம்பெறுகின்றன. நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான உறவை கொண்டிருக்கிறோம். நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்துடனான வாணிபம், குஜராத்தில் உள்ள லோத்தல் துறைமுகம் மூலம் நடந்துள்ளது. உலகில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ள போதும், நமது உறவுகள் நிலையாக உள்ளன. நமது ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நமது ஒத்துழைப்பு ஆழமாகியுள்ளது. இதற்கு எனது நண்பர் அதிபர் சிசியின் தலைமைக்கு நான் மிகப்பெரிய மதிப்பை உரித்தாக்க விரும்புகிறேன்.
இந்த ஆண்டு ஜி-20 தலைமைத்துவத்தை பெற்றுள்ள நிலையில், அதன் விருந்தினர் நாடாக எகிப்தை இந்தியா அழைத்துள்ளது. இது நமது தனித்துவ நட்புறவை பிரதிபலிக்கிறது.
நண்பர்களே, அரபிக்கடலின் ஒரு பகுதியில் இந்தியாவும், மற்றொரு பகுதியில் எகிப்தும் இருக்கிறது. இந்த இரு நாடுகளின் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்த உதவும். எனவே இன்றைய சந்திப்பின் போது ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு நிலையில் இருதரப்பு பங்கேற்பை அதிகப்படுத்த அதிபர் சிசியும், நானும் முடிவு செய்துள்ளோம். இந்தியா- எகிப்து ராணுவ ஒத்துழைப்பின் கீழ் அரசியல், பாதுகாப்பு பொருளாதாரம், அறிவியல் துறைகளில் மாபெரும் ஒத்துழைப்புக்கான நீண்டகால கட்டமைப்பை மேம்படுத்துவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
உலகெங்கிலும் பயங்கரவாத சம்பவங்கள் பரவலாக இருப்பது குறித்து இந்தியாவும், எகிப்தும் கவலை கொண்டுள்ளன. மனித குலத்திற்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுகட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கு சர்வதேச சமூகத்தை எச்சரிக்க நாங்கள் இணைந்து தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
எங்களுக்கிடையே பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஏராளமான திறன் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் எங்கள் ராணுவங்களுக்கிடையே திறன் கட்டமைப்பு மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சியை கணிசமான அளவு உயர்த்தி இருக்கிறோம். நமது பாதுகாப்பு தொழில்துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிரான தகவல் மற்றும் புலனாய்வு பரிமாற்றத்தை விரிவுப்படுத்தவும், இன்றைய சந்திப்பில் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
தீவிரவாத கருத்துக்களையும், தீவிரவாதத்தையும் பரப்புவதற்கு இணைய தளத்தை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராகவும், எங்களது ஒத்துழைப்பை நீடித்திருக்கிறோம்.
நண்பர்களே, கொவிட் பெருந்தொற்று காலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய வழங்கல் தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாங்கள் உன்னிப்பாக கவனித்திருக்கிறோம். இந்த சவாலான காலத்தில் அதிபர் சிசியும், நானும் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தோம். தேவையான காலங்களில் உடனடி உதவிகளை இரு நாடுகளும் பரஸ்பரம் பெற்றுள்ளன.
கொவிட் மற்றும் உக்ரைன் மோதலால் பாதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்து பொருள் வழங்கல் தொடரை சரி செய்து வலுப்படுத்துவது குறித்தும் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தியிருக்கிறோம். பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பது அவசியம் என்றும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்.
நண்பர்களே,
சிஓபி27 சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பருவநிலை விஷயத்தில் வளரும் நாடுகளின் நலன்களை உறுதிப்படுத்தும் அதன் முயற்சிகளுக்காகவும் எகிப்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
ஐநா சபையிலும், இதர சர்வதேச அமைப்புகளிலும் நீண்ட, சிறப்பான ஒத்துழைப்பை இந்தியாவும், எகிப்தும் கொண்டிருக்கின்றன. சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தூதரக உறவும், பேச்சுவார்த்தையும் அவசியம் என்பதை நாங்கள் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
மேன்மை தங்கிய அதிபர் அவர்களே,
உங்களையும், உங்களின் தூதுக்குழுவினரையும் மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கிறேன். நீங்களும், எகிப்து மக்களும் மகிழ்ச்சியான புத்தாண்டை பெறுவதற்கும் நான் வாழ்த்துகிறேன்.
உங்களுக்கு மிக்க நன்றி
கருத்துகள்