தற்போது பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, சென்னையில் பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,
சுயநினைவை இழந்த நிலையிலுள்ள அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளை அவருக்கு முக்கியமான அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடிக்கிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவர் படத்தில் நாயகியாக நடிகை காவ்யா தாப்பர் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கான, பாடல் காட்சிகள் லங்காவி தீவில் நடந்தது. கடலுக்குள் செலுத்தும் ‘ஜெட் ஸ்கை’ எனும் மோட்டார் வாகனத்தில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்லும் காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின் மீது, விஜய் ஆண்டனியின் வாகனம் மோதியதில் விஜய் ஆண்டனியின் முகத்தில் உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டன.
காவ்யா தாப்பர் காயமின்றித் தப்பினார். உடனடியாக படக்குழுவினர், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலேசியாவில் கோலாலம்பூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் மனைவி உள்ளிட்டோர் நேற்று கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் விஜய் ஆண்டனி இன்று மாலை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படுகிறார். “சென்னை பிரபல மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவர் நலமாக இருக்கிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். நடிகர் விஜய் ஆண்டனி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயதானபோதே இறந்து விட்டார். இவர் பிரபல எழுத்தாளர் மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனாவார்.
நடிகர் விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின் இசையமைப்பாளரானவர். கல்லூரிப் படிப்பை முடித்த பின் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலிப் பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles)
அமைத்தார். அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். அவர் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் வெளிவந்தது. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார் என்றே கூறலாம்.
கருத்துகள்