இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டலம் சார்பில் மிதிவண்டி & நடைப்பேரணி நடத்தப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி, 2023 பிப்ரவரி 13 முதல் 17 வரை நிதிக் கல்வியறிவு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடித்ததையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2023 பிப்ரவரி 18 அன்று, தங்களது ஊழியர்களின் பங்கேற்புடன் 'சைக்ளத்தான்' எனப்படும் சைக்கிள் பேரணி மற்றும் 'வாக்கத்தான்' எனப்படும் நடைப் பேரணி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பொதுமக்களுக்கு நிதி தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை பரப்புவதே இதன் நோக்கம் ஆகும். 2023 ஆம் ஆண்டின் நிதி கல்வியறிவு வாரத்தின் கருப்பொருள், "சேமிப்பு, திட்டமிடல், பட்ஜெட் ஆகியவற்றின் அவசியத்துடன் கூடிய நல்ல நிதி நடத்தை உங்களை மீட்கும் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளின் விவேகமான பயன்பாடு" என்பதாகும்.
சென்னை இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் திருமதி உமா சங்கர் இந்தப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுமார் 150 ரிசர்வ் வங்கிப் பணியாளர்கள் சைக்ளத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்வில் பங்கேற்றனர். அவர்கள் நிதி விழிப்புணர்வு தொடர்பான தகவல்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தும் பேரணியில் பங்கேற்றனர். நிதி தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை மக்களிடம் பரப்புவதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. மேலும், ரிசர்வ் வங்கி இந்த மாதத்தில் பெரிய அளவிலான ஒரு மையப்படுத்தப்பட்ட ஊடக விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளது. இந்த இயக்கம், இந்த ஆண்டின் நிதிக் கல்வி வாரக் கருப்பொருள் குறித்த அத்தியாவசிய நிதி விழிப்புணர்வுத் தகவல்களை ஒளிபரப்புகிறது. நிதி ரீதியாக விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
கருத்துகள்