பொய் வழக்குப் பதிந்து மனித உரிமை மீறல் செய்த நான்கு காவலர்களுக்கு உயர்நீதி மன்றம் உறுதி செய்த தண்டனை
பொய் வழக்குப் பதிந்து மனித உரிமை மீறல் செய்த நான்கு காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை இரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு:
மயிலாடுதுறை மாவட்டம் ப்ரவீன் பாபு அவரது நண்பர் அசோக் உடன் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்ற போது அங்கு பணியிலிருந்த காவலர் பாலு, போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ப்ரவீன் பாபுவைத் தாக்கியுள்ளார்.
அதனை ப்ரவீனின் நண்பர் அசோக் மொபைல் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்ததால் மேலும் ஆத்திரமடைந்த காவலர் பாலு அசோக்கையும் சேர்த்து தாக்கியுள்ளார். அதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்த சென்ற காவலர் பாலு மேலும் மூன்று காவலர்களுடன் இணைந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் கடுமையாகக் காயமடைந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக ப்ரவீன் பாபு மற்றும் அசோக் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தனர்.
வழக்கை விசாரித்த ஆணையம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இருவருக்கும் அபராதமாக தலா ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டு அந்தத் தொகையை நான்கு காவலர்களிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது. மேலும் நான்கு பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.
அதனை எதிர்த்து காவலர்கள் நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது. மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுப்பட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளதால் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்