சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப சிறுத்தை திட்டம் உள்ளது என்று திரு பூபேந்தர் யாதவ் கூறினார்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த உறுதிமொழிக்கு ஏற்ப சிறுத்தைகள் திட்டம் உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார். நேற்று மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறுத்தை திட்டம் குறித்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் அமைச்சர் இதனைக் கூறினார்.
திரு யாதவ், சிறுத்தைகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கும் அதன் இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்கும் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளின் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
சிறுத்தைகள் திட்ட ஆலோசனைக் குழு, விரிவான விவாதங்களை நடத்தியதோடு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சிறுத்தைகளை வெற்றிகரமாகக் கொண்டு வந்த அரசின் முயற்சிகளையும் பாராட்டியது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள வனம் வனவிலங்குகள் தொடர்பான பிரச்னைகள் பற்றிக் குறிப்பிட்டனர். சமூகம் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பில் அதிக அக்கறையை இவை வெளிப்படுத்தின.
குழு உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு நன்றி தெரிவித்த திரு யாதவ், எழுப்பப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அனைத்துப் பங்குதாரர்களின் சிறப்பான பங்கேற்புடன் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்