கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், தமிழக அரசுக்கு கடிதம்
தமிழ்நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் திரு செந்தில் குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மார்ச் 8, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் தமிழ்நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஆக இருந்த நிலையில், மார்ச் 15, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் அதன் எண்ணிக்கை 258-ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் அதே வாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 0.61-ஆக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் அது 1.99 சதவீதமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் கொவிட் தொற்று சூழ்நிலை குறித்து கண்காணிப்பதில் முக்கிய கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார். பரிசோதனை மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட 5 பணிகளை தொடர்ந்து செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.
மார்ச் 15, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் மாவட்டத்தைப் பொருத்த வரை சேலத்தில் 30 பேரும், நீலகிரி, திருப்பூரில் தலா 12 பேரும், திருச்சிராப்பள்ளியில் 11 பேரும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக திரு ராஜேஷ் பூஷன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்