நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 60 பவுன் நகைகளை தொடர்ந்து நான்காண்டுகளாகத் திருடிய பணிப்பெண் கைது
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரிலிருந்த தங்கம் மற்றும் வைரம், உள்ளிட்ட 60 பவுன் நகைகள் களவு போனது தொடர்பான புகாரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டில் வேலை செய்த பெண் பிடித்து விசாரித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், 'போயஸ் கார்டனிலுள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில் நான் வசித்து வருகிறேன். 2019-ஆம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து எனக்குச் சொந்தமான நகைகளை தனியாக லாக்கரில் வைத்து பராமரித்து வருகிறேன்.
அந்த லாக்கரில் 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் விலைக்கு வாங்கிய பாரம்பரிய நகைகளும் இருந்தன. 2021-ஆம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் வசித்து வந்த எனது வீட்டிலும் நகைகள் இருந்தன.
அதன் பின் கணவரான தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கு மாற்றப்பட்டதைத். தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனில் தந்தை வீட்டில் குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்தது.
செயின்ட் மேரிஸ் சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நானிருந்தபோது லாக்கர் சாவியை எனது அலமாரியில் வைத்திருப்பேன். இது எனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, மற்றும் வாகன ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.
கடந்த மாதம் 10-ஆம் தேதி லாக்கரை நான் திறந்து பார்த்த போது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தன. மதிப்பு மிக்க பல நகைகளைக் காணவில்லை. இந்த நகைகள் அனைத்தும் என் திருமணத்துக்கு முன்னும், பின்னுமென 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவையாகும்.
ஒரு ஜோடி வைரம் மற்றும் பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம்,நெக்லஸ், வளையல்கள் உட்பட 60 பவுன் நகைகள் நாங்கள் விலைக்கு வாங்கியது காணாமல் போயுள்ளன. அது தொடர்பாக எனது வீட்டில் பணி செய்யும் இரண்டு பணிப்பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது எனக்குச் சந்தேகமுள்ளது.
அது தொடர்பாக உரியவிசாரணை நடத்தி திருடப்பட்ட எனது நகைகளை மீட்டுத் தர வேண்டும்' என புகாரில் குறிப்பிட்டு இருந்ததாகவும் அதன் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இளங்கனி விசாரணையைத் தொடங்கினார்.
அதற்கு ஆதாரமாக ஐஸ்வர்யா, திருடுபோன நகைகள் சிலவற்றை அடையாளம் காட்ட தனது சகோதரியின் திருமணம் உட்பட சில நிகழ்ச்சிகளில் தான் அணிந்திருந்த புகைப்படங்களை விசாரணையில் கொடுத்துள்ளார். அதையும் அடிப்படையாக வைத்து விசாரித்தனர்.
முதல் கட்டமாக பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், நகை திருடுபோன வழக்கில் பணிப்பெண்ணான ஈஸ்வரி என்பவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த நகைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறிது சிறிதாக திருடப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நகைகளையும் மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. கடந்த மாதமே ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். இதுவே இந்த வழக்கில் துப்புத் துலக்குவதில் காலதாமதத்துக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை தேனாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூபாய். 9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவலும் காவல்துறைருக்கு விசாரணையில் தெரியவந்துள்ளதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்ட ரூ. 9 லட்சம் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கிக் கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி அவரது வீட்டில் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும், வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்குச் சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் வரவில்லை .
கருத்துகள்