திருச்சிராப்பள்ளியில் நடந்த அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா மாநாடு ஒரு சாதனையா அல்லது மேலிடம் வைத்த சோதனையா முடிவு வருமா
ஒரே மாலை இரண்டு கொக்கிகள்
திருச்சிராப்பள்ளி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவும், முன்னாள் முதலமைச்சர்கள் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் அஇஅதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவென முப்பெரும் விழா மாநாடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியின் முன்னால் முதல்வர் மற்றும் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் சார்ந்த அணியினர் சார்பில் நடைபெற்றதில்
சென்னை லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமை அலுவலக வடிவில் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30,000 த்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவைப் பகலாக்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தத மாநாட்டில் முன்னால் அமைச்சர்கள் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பானதடியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாநாட்டுத் திடலுக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாகமாகவே வரவேற்பளித்தனர். மாநாடு நடைபெறும் இடத்தின் நடுமையத்தில் சிகப்புக் கம்பளத்தில் ஒ.பன்னீர் செல்வம் வருகை தர ஏற்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எடப்பாடி. கே.பழனிச்சாமியின் நம்பிக்கைத் துரோகத்திற்கு சாவு மணி அடிக்க நீங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
என திருச்சிராப்பள்ளி மாநாட்டில் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசினார். அதில், “திருச்சி மாநாடு அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்று தீர்மானிக்கக் கூடிய ஓரிடம். மாநாடு நடத்தும் இடமான ஜி.கார்னர் பகுதி ரொம்ப ராசியான இடம். இந்த இடம் தான் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு அடிதளம் போட்டது.
அதிமுகவின் நிரந்தரப் பொதுசெயலாளர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா தான் என்று நாம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குப் பிறகு வந்த கபட வேடதாரி அரசியல் வித்தகர்கள், வியாபாரிகள், நயவஞ்சகர்கள், நம்பிக்கைத் துரோகிகள் 50 ஆண்டு கால அதிமுகவை அபகரிக்கும் வேலையில் ரத்து செய்துள்ளார்கள். அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மா என்பதை மாற்றியுள்ளனர், அவர்களை அந்தத் துரோகிகளை ஓட,ஓட விரட்டும் காலம் வெகு தொலைவிலில்லை.
என்னை இரண்டு முறை முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தான் நியமனம் செய்தார்கள். மூன்றாம் முறை சின்னம்மா சசிக்கலா நடராஜன் தான் என்னை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அப்போது திரும்ப என்னிடம் முதலமைச்சர் பதவியைக் கேட்டார்கள் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவோ இருக்க விருப்பமில்லை. உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்குள்ளது. அதைத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் விரும்பினார்கள். ஜெ.
ஜெயலலிதா அவர்கள் எனக்கு முதலமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள், நிதியமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் 13 ஆண்டுகள் கட்சியில் பொருளாளர் என்ற பதவியும் எனக்குத் தந்தார்கள். நான் பொருளாளர் பதவியை ஏற்ற போது அதிமுக 2 கோடி ரூபாய் பற்றாகுறையில் இருந்ததை 256 கோடியாக ஜெ.ஜெயலலிதா வழியில் தான் நான் உயர்த்தினேன்.
எனக்குத் தந்த பதவியை நான் திருப்பிக் கொடுத்துட்டேன். ஐயா! பழனிசாமி அவர்களே.. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது. சின்னம்மா சசிக்கலா நடராஜன் உங்களுக்கு முதலமைச்சர் என்ற பதவியைத் தந்தார்கள். அவர்களை பார்த்து நாய்கள் எதையோ குறைகிறது என்று சொன்னால், எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகி. சொல் வரலாறு உன்னை மன்னிக்குமா ? இப்படிப்பட்ட ஒரு ஆள், தனக்குத்தானே பொதுசெயலாளர் என பதவி சூட்டிக் கொண்டார். இது ஒரு கேலிக் கூத்து! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் ஒரு அடையாளம் இருக்கிறது; நீங்களும் (எடப்பாடி பழனிச்சாமியும்) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் ஒன்றா? அவரின் கால் தூசிக்குக் கூட வர மாட்டீர்கள். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகிகளை கழகத்தில் இருக்கவிடலாமா என்பதை தொண்டர்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும் இதே நிகழ்வில் பேசிய பண்ருட்டி எஸ் ராமச்சந்திரன், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. திருச்சியில் 1956 ஆம் ஆண்டு அண்ணா வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தினார்கள். அப்போதும் அந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன். இப்பொழுது 67 ஆண்டுகள் கழித்து இதே திருச்சியில் மாநாடு நடக்கும் போது 86 வயதான நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல் தலைவருக்கு வேண்டிய அடிப்படைக் குணமே நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது தான். மண்டியிட்டு காலில் விழுந்து பதவி பெற்று காலை வாரிவிடுபவரா நம்பிக்கைக்கு உரியவர். மூன்று முறை முதலமைச்சர் பதவி கொடுத்தும் திரும்பிக் கொடுத்த நம்பிக்கைக்கு உரியவர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதவியை வைத்துக்கொண்டு கொடுத்தவரையே பதம் பார்ப்பவரா நம்பிக்கைக்கு உரியவர்.
மகாபாரதக் கதைகளை கேட்டிருப்பீர்கள். சகுனி, துரோணாச்சாரியார் என அனைவரும் கௌரவர்கள் பக்கம் தான். அவர்களை எதிர்த்த பாண்டவர்கள் 5 பேர். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது கிருஷ்ணன். அவரும் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சத்தியம் செய்தார். நல்லவேளை அந்த காலத்தில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் இல்லை.
இருந்திருந்தால் அனைத்தும் கௌரவர்களுக்கு தான் சொந்தம் எனச் சொல்லி இருப்பார்கள். அப்படி இருந்திருந்தால் பாரதமே இன்று இருக்காது. பாரதப்போர் என்றால் என்ன என்று தெரியாது. பாரதத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை தோற்கடித்ததற்கு தர்மம் அவர்கள் பக்கம் இருந்தது. பெரும்பான்மையை சிறுபான்மை வெல்லும் என்பதற்கு பாரதப்போர் எடுத்துக்காட்டு” எனக் கூறினார். இதில் அவர் பேசியதில் தற்போது அதிமுகவில் நடந்துவரும் செயலை அது குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தினார். ஆக மொத்தம் திருச்சிராப்பள்ளியில் நடந்த அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா மாநாடு ஒரு சாதனையா அல்லது மேலிடம் வைத்த சோதனையா என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகும்

















கருத்துகள்