சைவம் வளர்த்த நால்வரில் சுந்தரமூர்த்தி நாயனார் பெயரிலுள்ள ஈசன் தடுத்தாட்கொண்ட அடிமை சாசன வெள்ளிச்சுவடி கண்டுபிடிப்பு
தமிழ்நாடு அரசு நிர்வாகம் செய்யும் பழமையான திருக்கோயில்களிலுள்ள ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்குத் தனிக்குழுவை அமைத்து. அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதுமுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து தற்போது ஓலைச் சுவடிகளைத் திரட்டி வருகிற நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவிலில் சுவடிகள் ஆய்வாளர் கோ.விசுவநாதன் கள ஆய்வு செய்த போது 2 அரிய வெள்ளியிலான ஏடுகளைக் கண்டறிந்துள்ளார்.
இந்த அரிய வெள்ளி ஏடுகள் குறித்து சுவடித்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்த போது,
சைவ சமயக் குரவோர்கள் நான்கு பேரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார். இவர் சடையனார், இசைஞானியாருக்கும் மகனாவார். சொந்த ஊர் திருநாவலூர். இயற்பெயர் நம்பியாரூரார். மக்கள் இவரை ஆருரார் எனவும் அழைத்தனர். சிவபெருமான் இவரின் அழகு கண்டு சுந்தரன் என்று அழைத்ததாகவும் வரலாறு. இவர் பொது ஆண்டு 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் "திருப்பாட்டு" என அழைக்கப்படுகிறது.
சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறையாகும். சுந்தரர் சிவபெருமான் மீது 38,000 பாடல்கள் பாடியதாக அறியலாம். அத்தகைய சிறப்பான சுந்தரமூர்த்தி நாயனாரின் மூதாதையர் எழுதிக் கொடுத்த "அடிமை ஓலைச்சாசன குறிப்புகள் அடங்கிய வெள்ளி ஏடு ஒன்றும் சி.மு. பாலகிருஷ்ண நாயுடு விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் சிறுவானூர் கோயிலுக்கு அவரின் நாமம் விளங்க எழுதிக் கொடுத்த மற்றொரு ஏடும் அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையர் எனும் மன்னன் தனது பால்ய சினேகிதன் சடையனின் மகன் நம்பியாரூரானை தத்தெடுத்து அரண்மனையில் வைத்து சிறப்புடன் வளர்த்தான். நம்பியாரூரன் வளர்ந்து ஆளான போது அவனுக்குப் புத்தூரிலுள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் பேசி முடித்தனர். திருமணம் புத்தூரில் நடைபெற்றது. சுந்தரர் மணப்பந்தலில் மணமுடிக்கக் காத்திருந்த போது சிவபெருமான் ஒரு முதிய அந்தணர் வேடம் பூண்டு வந்து திருமணத்தை நடக்க விடாமல் தடுத்தார். நம்பியாரூரான் அவரிடம் "திருமணத்தை ஏன் நடக்க விடாமல் தடுக்கிறீர்" எனக் கேட்டதற்கு அந்த அந்தணர் நம்பியாரூரரின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல் சபையோரைப் பார்த்து "இவனின் பாட்டன் எனக்கு வழியடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளான். எனவே இவன் என்னுடைய அடிமை" என்று கூறினார். அது கேட்டு நம்பியாரூரான் அந்த அந்தணரை எள்ளி நகையாடியதோடு பித்தனென்று வசை பாடினான்.
மேலும் அந்தணன் கையில் வைத்திருந்த அடிமை ஓலை சாசனத்தைப் பிடுங்கி கிழித்து எறிந்தான். அந்தணர், நம்பியாரூரான் செய்த கொடுஞ்செயலைச் சபையோரிடம் கூறி முறையிட்டார். பின்னர் அடிமை சாசனத்தின் மூல ஓலை திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. எனவே அங்கு வந்து இவ்வழக்கைத் தீர்த்துத் தருமாறு சபையோரை வேண்டினார். அதன்படி சபையாரும் நம்பியூரானும் திருவெண்ணெய்நல்லூர் சென்றனர். அந்தணன் அடிமை சாசன மூல ஓலையைக் கொண்டு வந்து சபையோரிடம் கொடுத்தார். அதில் நம்பியாருராரின் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை சாசன விவரமிருந்தது. மேலும் அடிமை ஓலை சாசனத்தில் சாட்சிக் கையொப்பமிட்டவர்கள் அது தங்கள் கையெழுத்துத் தான் என்றும் ஒத்துக் கொண்டனர்(முப்பாட்டன் காலத்தில் எழுதிய ஓலை மூன்று தலைமுறை கடந்த நான்காம் தலைமுறையில் நீதி கேட்ட போது சாட்சியானதாக கூறுவது) . நாமும் ஏற்போம்
வேறு ஓலைகள் கொண்டு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த நம்பியூராருடைய பாட்டனின் கையெழுத்தும் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட. பின் சபையோர் "நம்பியூரான் அந்தணருக்கு அடிமைப்பணி செய்ய வேண்டும்" எனத் தீர்ப்பளித்தனர். நம்பியாரூரான் அதற்கு இசைவு தெரிவித்தான். பின்னர் அவன் அந்தணரைப் பின் தொடர்ந்து சென்றான். முதிய அந்தணர் திருவட்டுறை கோவிலுக்குள் சென்றதும் மறைந்து போனார். நம்பியாரூரான் முதிய அந்தணனைக் கோவில் முழுவதும் தேடி மயங்கி நின்றான். அப்போது சிவன் ஆனந்தமூர்த்தியாய் உமையம்மையுடன் விடை மீது அமர்ந்து வந்து காட்சியளித்தார். மேலும் பூர்வ பிறவி குறித்தும் எடுத்துரைத்தார். "பிறவிப் பெருங்கடல் தொடராமல் இருக்கவே உன்னை நான் தடுத்து ஆட்கொண்டேன்" எனக் கூறவே
நம்பியூரான் ஆனந்த களிப்பில் ஈசனை விழுந்து வணங்கினான். அப்போது சிவன், "நீ எம்முடன் வன்மையாகப் பேசியதால், உனக்கு ‘வன்தொண்டன்’ எனப் பெயர் சூட்டுகிறேன்" என்றார். மேலும் "ஆருரா! என்னை தமிழ்ப் பாவால் பாடு என்றார். நம்பியாரூரான் பாட முடியாமல் மயங்கி நின்றான். அப்பொழுது சிவன், "பித்தா" என்ற சொல்லை எடுத்துக் கொடுத்துப் பாடுமாறு கூறினார். நம்பியூரானும் "பித்தா! பிறைசூடி பெருமானே! அருளாளா!" என அடியெடுத்து சிவன் மீது திருப்பதிகம் பாடியது பெரிய புராணத்தில் வரும் தடுத்தாட்கொண்ட புராணம் அடிமை ஓலை சாசன வழக்கு வரலாற்றைத் தெளிவுபடக் குறிப்பிடுகிறது.
கண்டறியப்பட்ட 2 வெள்ளி ஏடுகளில் 1 வெள்ளி ஏட்டில் அடிமை ஓலை சாசன குறிப்புகளில் காணப்படுகிறதாவது: "அடிமை ஓலை ஸாதனம்: திருநாவலூரில் இருக்கின்ற ஆதி சைவனாகிய ஆரூரன் என்கிற நான் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியாரும் வழித் தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் - இப்படிக்கு - ஆரூரன் " என வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாசகம் மேற்கண்ட அடிமை சாசன வழக்கு வாலாற்றோடு தொடர்புடையது என்பது புலப்படுகிறது. இவ்வெள்ளி ஏடு 17.7.செ.மீ. நீளமும் 2.8 செ.மீ. அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. வெள்ளி ஏட்டினை எழுதியவர் மற்றும் ஏட்டில் காலம் பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை. எனினும் சுவடியில் வரும் கூட்டெழுத்துக்கள் அடிப்படையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் இக்கோவிலில் திருவாபுரீஸ்வரர் சிலை அமைந்துள்ள கருவறை உள்ளே 66. செ.மீ .நீளமுடைய வெள்ளிக்கோல் ஒன்றும் மரத்தில் செய்யப்பட்ட பாதக்குறடு 2-ம் செய்து வைத்து பூஜை செய்யப்படுகின்றன. இவை சிவபெருமான் அந்தணராக வடிவெடுத்து வழக்காட வந்த பொழுது கையில் வைத்திருந்த கைத்தடியும் பாதத்தில் அணிந்திருந்த பாதக்குறடும் என்று மக்களால் நம்பப்பட்டுக் குறிப்பிடுகின்றனர். வெள்ளி அடிமை சாசன ஏடு, வெள்ளிக்கோல், மரத்தால் செய்யப்பட்ட பாதக்குறடு ஆகியவை இறைவன் சுந்தரரை, தடுத்தாட்கொண்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் கோவிலில் செய்து வைத்து பூஜித்தும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன என்று தெரிந்துகொள்ள முடிகின்றது.
மேலும் இதன் மூலம் 8 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த வழக்காடு முறை, அடிமை சாசன முறை குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது. இக்கோவிலில் உள்ள மற்றொரு வெள்ளி ஏடு சிறுவானூர் வேணு கோபாலசாமி கோவிலினுடையது. இவ்வெள்ளி ஏட்டில் "சிறுவானூர் சி.மு. பாலகிருஷ்ண நாயுடு நாம வெள்ளி கவசம் 1930 சுக்கல தை மாதம் 9" என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வெள்ளி ஏடு எழுதப்பட்ட காலம் 1930 தை மாதம் 9 ஆம் தேதி என்று அறிய முடிகிறது. இவ்வெள்ளி ஏட்டை தன் நாமம் விளங்க தெய்வத்திற்கு கைங்கர்யமாக எழுதி வைத்தவர் சி.மு. பாலகிருஷ்ண நாயுடு என்பது தெரிகிறது. இவ்வெள்ளி ஏடு 11.6. செ.மீ. நீளமும் 1.5 செ.மீ. அகலமும் கொண்டது" என்று முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறினார். இது தற்காலம் கொண்டது
கருத்துகள்