முதுமலைக்காட்டில் அமைந்த புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் சிறப்பு முகாமைப் பார்வையிட்ட குடியரசுத் தலைவர், யானைகளைப் பராமரிப்பவர்களுடன் கலந்துரையாடினார்
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றான தெப்பக்காடு யானைகள் முகாமை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று (05.08.2023) பார்வையிட்டார். அத்துடன் யானைகளைப் பராமரிப்பவர்களுடன் (MAHOUTS AND CAVADIES) கலந்துரையாடினார். கலந்துரையாடலின் போது, ஆஸ்கர் விருது பெற்ற "எலிஃபெண்ட் விஸ்பரெர்ஸ்" ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் யானைகள் பராமரிப்பு மேலாண்மைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரியது என குடியரசுத் தலைவர் கூறினார். நமது தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளைப் பாதுகாப்பது நமது பொறுப்பு என்றும் அவர் கூறினார். ஆசியாவில் யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் வகையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். எனவே, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதும் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். தெப்பக்காடு யானைகள் முகாமை நிர்வகிப்பதற்கு, பெட்டக்குறும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசர் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் பயன்படுத்தப்படுவதைக் கண்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகை அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து ஆஸ்கர் புகழ் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் முதுலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைள் வளர்ப்பு முகாமுக்கு வந்து, அங்கு பணியாற்றி வரும் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் இருவரையும் அழைத்து பரிசுத் தொகை வழங்கிய நிலையில். இந்தத் தம்பதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வந்தவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் ஆகியோர் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றார். தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமை பார்வையிட்டவர் அங்கு பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். பின் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார்.
யானைப்பாகன்களுடன் உரையாடல்: குடியரசுத் தலைவர் முர்மு கோவை சாடிவயல் மற்றும் முதுமலை யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் 38 பேரிடம் கலந்துரையாடினார். அவர்களிடம் பேசும் போது, “முதுமலை புலிகள் காப்பகத்தை சிறப்பாக பராமரித்துள்ளீர்கள். வனவிலங்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளீர்கள். நமது யானைகளை பாதுகாப்பது நமது தேசியக் கடமையாகும். இந்தியாவின் கலாச்சாரத் தொன்மையைப் பாதுகாப்பதில் பழங்குடிகள் முக்கிய பங்கு ஆற்றிவருகின்றனர். இந்த பழங்குடிகளுக்கு இந்திய அரசியல் அமைப்பு உரிமை வழங்குவது மிகவும் முக்கியத்துவமானதாக உள்ளது.
உங்களுக்கு தேவையான வீடுகள், சாலை, மின்வசதிகள் செய்து தரப்படும், வனத்தை சிறப்பாக பராமரியுங்கள். அதேபோல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ப் படிக்க வையுங்கள். அது உங்கள் வாழ்க்கை த் தரத்தை உயர்த்தும்’’ என்றார். பின்னர், 40 ஆண்டுகளாக பாகன்களாக பணியாற்றி வரும் தேவராஜ், கிருமாறன் ஆகியோரிடம், யானைகளை எப்படி பராமரிப்பது, காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டியது எப்படி, என்னென்ன சிரமங்கள் இருந்தன ஆகிய விஷயங்களை கேட்டு வியப்படைந்தார்.
குடியரசுத் தலைவர் யானைகள் முகாமுக்கு வரும் போது அவரை வரவேற்க உண்ணி குச்சிகளால் யானைகள் வடிவமைக்கபட்டிருந்தன. அதை பயத்துடன் பார்த்து வந்த குடியரசு தலைவரிடம், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் ‘யானைகளை பார்த்தவுடன் நான் பயந்து விட்டேன். அதன்பிறகு தான் இது யானை வடிவம் என்று தெரிந்தது’ என்று கூறிக்கொண்டே மெதுவாக குச்சி யானைகளை தொட்டு பார்த்தார். பின்னர் மாலை 5 மணிக்கு முகாமில் இருந்து மசினகுடி திரும்பினார்.அப்போது அவரை பார்க்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். மக்களை பார்த்ததும் வாகனத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வெளியே வந்தார். மக்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, தான் கொண்டு வந்த சாக்லேட்களை வழங்கி மகிழ்ந்தார். பொதுமக்களும் குடியரசுத் தலைவரிடமிருந்து சாக்லேட்டுகளை வாங்கி மகிழ்ச்சியடைந்தனர். மசினகுடியை சேர்ந்த அனன்யா என்ற 11 வயது சிறுமி தான் எழுதிய 'தி பேர்ட்ஸ் ஆஃப் மசினகுடி' என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்
பின், மாலை 5.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மசினகுடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருவதை முன்னிட்டு, தெப்பக்காடு பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால், 2 கி.மீ. சுற்றளவுக்கு காவல்துறையின் அதிரடிப்படை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் ஆகிய இடங்களில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள்