48-வது டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்று நாட்டின் படைப்பாற்றலை வெளிப்படுத்த உள்ளது
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 76 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் வெற்றிகரமாக பங்கேற்ற பின்னர், 2023, செப்டம்பர் 7 அன்று தொடங்கும் 48 வது டொரண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்தியா தனது திரைப்படங்களைக் கொண்டு செல்லத் தயாராக உள்ளது. இந்த ஆண்டு, திறமை, உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு மையமாக இந்தியாவை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். இந்தத் திரைப்பட விழாவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநருமான திரு. பிரித்துல் குமார் தலைமையில் இந்திய தூதுக்குழு செல்லும்.
நாட்டின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தவும், இந்தியாவுடன் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்கவும், இந்தியாவிலுள்ள இடங்களில் படமாக்கவும் சர்வதேச பங்குதாரர்களை அழைக்கவும் இந்த விழாவின் போது இந்தியா பல அமர்வுகளை நடத்தும். இந்தியாவின் திரைப்படக் கொள்கைகள், ஒற்றைச் சாளர பொறிமுறை ஆகியவற்றை வெளிப்படுத்தும் முயற்சியாக, இந்தியாவில் படப்பிடிப்பை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக சிறப்பு அமர்வு நடத்தப்படும்.
அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரங்கு திறப்பு விழாவுடன் இந்தியாவின் பங்கேற்பு தொடங்கும். கதைசொல்லிகளின் பூமியாக இந்தியா குறித்த அமர்வு மற்றும் சர்வதேச பிரமுகர்களுடன் பல சந்திப்புகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, டொரண்டோ திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் தர்செம் சிங் தண்டுவார் இயக்கிய டியர் ஜஸ்ஸி, நிகில் நாகேஷ் பட் இயக்கிய கில், கரண் புலானி இயக்கிய தேங்க்யூ ஃபார் கமிங், கிரண் ராவ் இயக்கிய லாஸ்ட் லேடீஸ், ஜெயந்த் திகம்பர் சோமால்கர் இயக்கிய ஸ்தல்/ எ மேட்ச், ஆனந்த் பட்வர்தனின் தி வேர்ல்ட் இஸ் ஃபேமிலி / வசுதைவ குடும்பகம் ஆகிய ஆறு இந்திய திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுசி கணேசன் இயக்கிய தில் ஹை கிரே படம் சந்தைப் பிரிவில் திரையிடப்படுகிறது.
கருத்துகள்