வெப்ப அலை தொடர்பான சூழ்நிலைகளுக்கான தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு
அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பிரதமர் வலியுறுத்தினார்; மருத்துவமனைகளில் போதிய வசதிகளை தயார்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்
வரவிருக்கும் கோடை காலத்திற்கான முன்னறிவிப்புகள், இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கப்பட்டது
சுகாதாரத் துறையின் தயார்நிலை குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்
அத்தியாவசிய தகவல், கல்வி மற்றும் தொடர்பு / விழிப்புணர்வு சார்ந்தவற்றை அனைத்து தளங்களிலும் பிராந்திய மொழிகளில், சரியான நேரத்தில் பரப்புவது பற்றி வலியுறுத்தப்பட்டது
சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள ஆலோசனைகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக பரப்பப்பட வேண்டும்
வரவிருக்கும் வெப்ப அலை பருவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திற்கான வெப்பநிலை கண்ணோட்டம், வரவிருக்கும் கோடை காலத்திற்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) முன்னறிவிப்புகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள், குறிப்பாக மத்திய இந்தியா மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியாவில் அதிக நிகழ்தகவு ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது.
அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழியாக செலுத்தப்படும் திரவங்கள், ஐஸ் கட்டிகள், ஓ.ஆர்.எஸ் மற்றும் குடிநீர் ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதாரத் துறையின் தயார்நிலை மதிப்பாய்வு செய்யப்பட்டது.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அனைத்து தளங்களிலும் குறிப்பாக பிராந்திய மொழிகளில் அத்தியாவசியமான தகவல், கல்வி மற்றும் தொடர்பு / விழிப்புணர்வு செய்திகளை சரியான நேரத்தில் பரப்புவது குறித்து வலியுறுத்தப்பட்டது. 2024-ஆம் ஆண்டில் வழக்கத்தை விட வெப்பமான கோடைக்காலம் எதிர்பார்க்கப்படுவதுடன், இது பொதுத் தேர்தல் நேரமாக இருப்பதால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய ஆலோசனைகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படுவதன் அவசியம் உணரப்பட்டது.
அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் பிரதமர் வலியுறுத்தினார். மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசின் அனைத்து பிரிவுகளும், பல்வேறு அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். மருத்துவமனைகளில் போதிய வசதிகளை தயார்நிலையில் வைத்திருப்பதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். காட்டுத் தீயை விரைந்து கண்டறிந்து அணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், உள்துறை செயலாளர், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்