மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்.
வயது மூப்பு காரணமாக முதுபெரும் அரசியல் தலைவரும் எம்ஜிஆர் கழக நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.
1926 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டையில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நிர்வாகத்திலும் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால், நாடக நிர்வாகத்தையும் பார்த்துக் கொண்டார்.
பின்னாட்களில் ஈ.வே.ரா அறிமுகம் கிடைத்து, அவருக்கு உதவியாளர் ஆனார் ஆர்.எம்.வீரப்பன். தொடர்ந்து டாக்டர் சி.என்.அண்ணாதுரை உதவியாளர் ஆனவருக்கு, எம்ஜிஆரின் அறிமுகமும் கிடைத்தது. நாடகத் துறையில் இயங்கி வந்தவர், எம்ஜிஆர் மூலம் திரைத் துறையிலும் கால் பதித்தார்.
எம்ஜிஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் சத்யா மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளார். எம்ஜிஆர் நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும், சிவாஜி கணேசன் நடித்த புதிய வானம், கமல்ஹாசன் நடித்த காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி இரண்டு அணிகளாக உடைந்தது, அங்கு அவர் தலைமையில் ஒரு அணி இருந்தது. வி.என்.ஜானகியை முதலமைச்சராக்க 98 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றவர், பின்னர் ஜெ.ஜெயலலிதாவின் கோஷ்டியுடன் சமரசம் செய்து, கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்தார்.
ஆர்.எம்.வீரப்பன் இரண்டு முறை சட்டமன்ற மேலவைக்கும், மூன்று முறை சட்டமன்றப் பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1991 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கயம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.எம்.வீரப்பன் திருமதி ராஜம்மாளை 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி அன்று திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தார். அறிஞர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகள் திருமதி செல்வி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனைத் திருமணம் செய்தார்.
ஆர்.எம்.வீரப்பன் இன்று 97வது வயதில் காலமானார் .நாளை சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்
கருத்துகள்