பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்பட்டு காட்டாற்று வெள்ளம் வந்தது,
அய்யோ விட்டுடோமே, போங்க போங்கனு சொல்றீங்களே.. வீட்டுல போயிட்டு என்ன பதில் சொல்லுவோம்..கோர முகத்தைக் காட்டிய குற்றால அருவியின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 17 வயதுச் சிறுவன். தலையிலடித்துக்கொண்டு கதறியழுத சிறுவனின் அத்தை.
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அந்திமாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்தது. நேற்றுக் காலையிலிருந்து வெயிலில்லாமல் இதமான சூழல் நிலவியது.
இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
காலையிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குளித்து வந்த நிலையில் சுமார் 2.30 மணியளவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகப் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி குற்றாலம் பகுதியில் மழை பெய்யவில்லை என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் ஐந்தருவியில் முன்னதாகவே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பழைய குற்றாலத்தில் அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், தண்ணீரின் வரத்து அதிகரித்தவுடன் சுற்றுலாப் பயணிகள் தாங்களாகவே அருவிக் கரைக்கு வந்தனர்.
சுமார் 300 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலத்தில் குளித்து கொண்டிருக்கையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கினர். பிறகு, அவர்களைத் தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டதில் திருநெல்வேலியிலிருந்து வந்த அஸ்வின் என்ற 17 வயதுச் சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். தீயணைப்புப் படையினர் அவரது உடலை மீட்டனர்.
மேலும் வேறு யாரேனும் சிக்கினரா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்தனர். தற்போது சம்பவம் நடைபெற்ற பழைய குற்றாலம் அருவியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.தென்காசி மாவட்டத்திற்கு கனமழை குறித்து வாநிலை ஆய்வு நடுவம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், தென்காசியில் நேற்று முன்தினம் 9 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியது. சங்கரன்கோவிலில் 2மி.மீ, அடைவிநாயனார் அணை 25மி.மீ, ராமனதி அணை 22மி.மீ, சிவகிரி 4மி.மீ, ஆய்க்குடி 3மி.மீ என்ற அளவில் மழை அளவு பதிவாகியது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, குற்றாலம், பகுதியில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவி சீசன் துவங்கும்.
பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் துவங்கும் குற்றால அருவி சீசன் கோடை மழையின் காரணமாகத் தற்போது முன்னதாகவே துவங்கியது. மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்தும் அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றால அருவி சீசன் தொடங்கியது. ஆனால், பொதுவாக மே மாதத்தில் வறண்டு, பாறையை ஒட்டியே தண்ணீர் வந்து கொண்டிருக்கும் குற்றாலத்தில் இந்த ஆண்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தற்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கோடை விடுமுறை என்பதால் உள்ளூர் மக்களை விட சுற்றுலா வந்த நபர்கள் நிலை தெரியாமல் அருவியில் குளித்ததால் வெள்ளத்தில் சிக்கிய நிலையில். இன்று அருவியில் ஆளரவமற்ற பாதுகாப்பு பலமாய் உள்ளது
கருத்துகள்