உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை
முன்னிட்டு காஸியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம், "உலகளாவிய தரநிலைகள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை" குறித்த பயிலரங்கை நடத்தியது.
"உலகளாவிய தர நிலைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை" தொடர்பான ஒரு நாள் பயிலரங்கு, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் தரம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டு (2024) அக்டோபர் 15 முதல் 24-ம் தேதி வரை இந்தியாவால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாட்டின் முன்னோட்டமாக இந்த நடைபெற்றது.
சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) இந்திய பகுதி அலுவலகத்துடன் இணைந்து மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் (NTIPRIT) நேற்று (2024 மே 17) காஸியாபாத்தில் உள்ள அதன் வளாகத்தில் இந்த பயிலரங்கை நடத்தியது. உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொலைத் தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் தொடங்கி வைத்தார்.
தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் தில்லியில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் திரு நீரஜ் மிட்டல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க தரப்படுத்தலில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.
எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல், உலகளாவிய சிறந்த செயல்பாடுகளை உறுதி செய்தல், பாதுகாப்பை மேம்படுத்துதல், ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது. மேலும். டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் உலக தொலைத்தொடர்பு தினம்
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் சி-டாட் (C-DOT), உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிகளின்போது உள்நாட்டு தொலைத்தொடர்புத் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு முயற்சிகளாக நிதி மற்றும் ஸ்டார் ("NIDHI" & "STAR) திட்ட முன்முயற்சிகள் அறிவிக்கப்பட்டன.
கிராமப்புற மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இந்தியாவின் தொலைத் தொடர்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு தொலைத் தொடர்புத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவது இவற்றின் நோக்கமாகும். கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து, புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை இந்த திட்ட முன்முயற்சிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியாவில் பெண்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பிரிவுகளில் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பெண் தொழில்முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேலும் ஊக்குவிப்பதற்காக சி-டாட் நிறுவனம் "நிதி" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிதி திட்டத்தின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெண்கள் தலைமையிலான அங்கீகரிக்கப்பட்ட 10 புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி உட்பட தேவையான ஆதரவு வழங்கப்படும்.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு இந்த இணைய தள இணைப்பை பார்க்கலாம்: https://www.cdot.in/cdotweb/web/home.php
ஸ்டார் திட்டத்தின் மூலம் 20 என்ஐஆர்எஃப் (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு) தரவரிசை பொறியியல் நிறுவனங்களில் முனைவர் (பிஎச்டி) பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையை சி-டாட் வழங்குகிறது. இந்த திட்டத்தில். தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் உதவித்தொகை, நான்கு ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி காந்திநகர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி காரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி இந்தூர், ஐஐடி மும்பை, ஐஐடி குவஹாத்தி, ஐஐடி தில்லி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 12 பிஎச்டி மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின்போது உதவித்தொகைக்கான ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்