கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் - பாயல் கபாடியா தனது 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்திற்காக கிராண்ட் பிரி விருதை வென்றார்
77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திறமை தனித்துவமாக பரிமளித்தது. உலகின் முன்னணி திரைப்பட விழாவான இதில் இந்தியாவின் இரண்டு திரைப்பட இயக்குநர்கள், ஒரு நடிகை, ஒரு ஒளிப்பதிவாளர் ஆகியோர் சிறந்த விருதுகளை வென்றுள்ளனர். செழிப்பான திரைப்படத் துறையைக் கொண்ட மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவின் திரைப்பட இயக்குநர்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.
30 ஆண்டுகளில் முதல் முறையாக, இரண்டு செவிலியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம், விழாவின் மிக உயர்ந்த விருதான பாம் டி'ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கபாடியாவின் படம் கிராண்ட் பிரி பிரிவில் இரண்டாவது இடத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம், எஃப்.டி.ஐ.ஐ முன்னாள் மாணவரான பாயல் கபாடியா, இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் ஆனார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாஜி என் கருணின் 'ஸ்வாஹம்' மிக உயர்ந்த விருதுக்காக போட்டியிட்டது.
இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஆடியோ-விஷுவல் ஒப்பந்தத்தின் கீழ், பாயலின் படத்திற்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ இந்தோ-பிரெஞ்சு இணை தயாரிப்பு அந்தஸ்தை வழங்கியது. மகாராஷ்டிராவில் (ரத்னகிரி மற்றும் மும்பை) இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதிகாரப்பூர்வ இணை தயாரிப்புக்கான இந்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த இணை தயாரிப்பு செலவில் 30% க்கு இத்திரைப்படம் இடைக்கால ஒப்புதலைப் பெற்றது.
கன்னட நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட 15 நிமிட குறும்படமான " சன்பிளவர்ஸ் வேர் தி பர்ஸ்ட் ஒன் டு நோ" லா சினிஃப் பிரிவில் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர் சிதானந்தா எஸ் நாயக் முதல் பரிசை வென்றார். இயக்கம், மின்னணு ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலி ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றிய எஃப்.டி.ஐ.ஐ.யின் தொலைக்காட்சி பிரிவின் ஓராண்டு திட்டத்தின் தயாரிப்பாகும். 2022 இல் எப்டிஐஐ-யில் சேருவதற்கு முன்பு, சிதானந்த் எஸ் நாயக் 75 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் கிரியேட்டிவ் மைண்ட்ஸ் வெற்றியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இது சினிமா துறையில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை அங்கீகரித்து ஆதரிப்பதற்கான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இந்தியாவில் பிறந்த மான்சி மகேஸ்வரியின் பன்னிஹூட் என்ற அனிமேஷன் திரைப்படம் லா சினிஃப் தேர்வில் மூன்றாவது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விழா உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஷியாம் பெனகலின் பணியைக் கொண்டாடியது. இந்தியாவில் வெளியாகி 48 ஆண்டுகளுக்குப் பிறகு, பெனகலின் மந்தன், இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு, திரைப்பட பாரம்பரிய அறக்கட்டளையால் மீட்டெடுக்கப்பட்டு, கேன்ஸ் திரைப்பட விழாவில் கிளாசிக் பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்திய சினிமாவில் தனது வளமான படைப்புகளுக்காக அறியப்பட்ட மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க பியர் ஏஞ்சனியக்ஸ் ட்ரிபியூட் விருது பெற்ற முதல் ஆசியரானார். 'அன் செர்ன் ரிகார்ட்' பிரிவில் 'தி ஷேம்லெஸ்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுசுயா சென்குப்தா கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்துள்ளார்.
கேன்ஸில் ஜொலிக்கும் மற்றொரு திரைப்பட இயக்குநர் மைசம் அலி, அவரும் எஃப்.டி.ஐ.ஐ முன்னாள் மாணவர். அவரது திரைப்படம் "இன் ரிட்ரீட்" கேன்ஸ் ஆசிட் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. 1993 முதல் சினிமாவின் பரவலுக்கான சங்கம் நடத்தும் பிரிவில் ஒரு இந்தியத் திரைப்படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
77 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டை நாம் கண்டோம். இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அதன் சாதனைகளைக் கொண்டாடுவதற்கு ஒரு சிறப்பு காரணம் உள்ளது. ஏனெனில் அதன் முன்னாள் மாணவர்களான பாயல் கபாடியா, சந்தோஷ் சிவன், மைசம் அலி மற்றும் சிதானந்த் எஸ் நாயக் ஆகியோர் கேன்ஸ் விழாவில் பிரகாசிக்கிறார்கள். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இது, மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
ஒற்றைச் சாளர முறையில் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்தல், பல்வேறு நாடுகளுடன் கூட்டுத் தயாரிப்பு, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சத்யஜித்ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் திரைப்படக் கல்விக்கு ஆதரவளித்தல் அல்லது இந்தியாவை உலகின் உள்ளடக்க மையமாக உருவாக்குவதற்கான பன்முக முயற்சிகள் ஆகிய அனைத்தும் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்