சென்னை ஆவடி போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் பொன்விழா கொண்டாட்டம்
சென்னை ஆவடி போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனப் பொன்விழா பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் முன்னிலையில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நாட்டின் பாதுகாப்புத்துறை நவீனத் தொழில்நுட்பங்களில் தற்சார்பை விரிவுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறப்பு மிக்கப் பயணத்தை போற்றுவதற்காக பொன்விழாக் கொண்டாட்டங்கள் இன்று ஆவடியில் உள்ள இந்நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தலைமை விருந்தினராகவும் ஆயுதங்கள் மற்றும் போர் பொறியியல் பிரிவில் தலைமை இயக்குநர் பேராசிரியர் பிரதீக் கிஷோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். டிஆர்டிஓ தலைமையக / ஆய்வக இயக்குநர்கள், ராணுவம் மற்றும் கப்பற்படை அதிகாரிகள், மத்திய மாநில அரசு அதிகாரிகள், தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னை ஆவடி போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சாதனைகள் பற்றி பிரபல முன்னாள் அதிகாரிகளின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் இந்த விழா தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்டன. விழாவில் பேசிய தலைமை விருந்தினர், ஆயுதம் தாங்கிய போர் வாகனங்கள் தயாரிப்பில் இந்த நிறுவனத்தின் சாதனைகளைப் பாராட்டினார். பாதுகாப்புத் துறையில் மாறி வரும் நிலைமைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர், இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு மிகப் பெரும் பங்களிப்பு செய்த முன்னாள் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தப் பொன்விழாவையொட்டி, போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் சிறப்பு அம்சங்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது.
பிற்பகலில் நடைபெற்ற அமர்வில், “21-ம் நூற்றாண்டில் டாங்குகள் யுத்தம் – செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத் தேவைகள்” என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. நிபுணர்களின் தொலைநோக்குப் பார்வைகள் இந்திய ராணுவத்தினர், டிஆர்டிஓ மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த நிறுவனத்தின் எதிர்கால சவால்களை சந்திக்க இது பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள்