பிடெக் / இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த 80%க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்,
முதுகலை பட்டப்படிப்பு முடித்த 75%க்கும் அதிகமான மாணவர்களுக்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி) வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்துள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் (ஐஐடி) சேர்ந்த பிடெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் தங்களுக்கு பட்டமளிப்பு நடைபெறும் காலத்திலேயே வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2024 பட்டமளிப்பு விழாவிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நடப்பாண்டிலும் இத்தொழில்நுட்பக் கழகம் இந்த சாதனையைப் படைக்க உள்ளது.
2024, ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடப்பாண்டில் 80%க்கும் மேற்பட்ட பிடெக் / இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும், 75%க்கும் அதிகமான முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்துள்ளது. 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின் போது 256 நிறுவனங்களில் 1,091 பேர் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர, மொத்தமுள்ள 300 முன்வேலைவாய்ப்பு பணிகளுக்கு 235 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின்போது ஜப்பான், ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளையும், 85 புத்தொழில் நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. இவ்வாறு பணியமர்த்தப்பட்ட 43% பேர் முக்கிய துறைகளிலும், 20% பேர் மென்பொருள் துறையிலும், 10%க்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு/ நிதி / ஆலோசனை மற்றும் தரவு அறிவியல் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.
பிஎச்டி பட்டதாரிகளுக்காக வரும் கல்வியாண்டு முதல் ‘ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவு’ ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஒப்பீடு அளவிலான சம்பளம் ரூ.19.6 லட்சமாகவும் சராசரி ஊதியம் ரூ.22 லட்சமாகவும் உள்ளது.
இத்தகைய வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசிய சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் வேலைவாய்ப்பு சூழ்நிலை நீடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். எனவே இங்கு படிக்கும் தங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைப் பாதை பற்றி எந்தப் பெற்றோரும் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார்.
கருத்துகள்