"இணையதளப் பாதுகாப்பின்மையை ஆய்வு செய்து களைதல் - இணைக்கப்பட்ட உலகில் உறுதித் தன்மையை உருவாக்குதல்": இணையதளப் பாதுகாப்பு தொடர்பான மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது
இணையதளப் பாதுகாப்பு ஒரு தீவிரமான விஷயம். இணையதளப் பாதுகாப்பின்மை தொடர்பான அச்சுறுத்தல்கள் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வலுவான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பைப் பராமரிப்பது முக்கியம். இந்நிலையில் புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டில், இணையதளப் பாதுகாப்புக்கான முக்கிய உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், "தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைப்பதையும் கடைசி நிலை வரை அரசு சேவைகள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதிலும் பொது சேவை மையங்கள் எனப்படும் சிஎஸ்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். சிஎஸ்சி மற்றும் யுஎஸ்ஐ இடையேயான ஒத்துழைப்பு நமது டிஜிட்டல் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல், செயல் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தரவுகளை மையப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதில் மோசடிகளுக்கு ஆளாகாமல் தவிர்த்து இணைய அபாயங்கள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்று அவர் கூறினார். இணைய பாதுகாப்பு உத்திகளை வலுப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.
"வளர்ந்து வரும் இணையதள அச்சுறுத்தல்கள் மற்றும் தீர்வுகள்" என்ற தலைப்பில் குழு விவாதமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, இணையதளப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக சிஎஸ்சி மற்றும் யுஎஸ்ஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.
பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி):
பொது சேவை மையங்கள் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அவை நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்கான தொடர்பு முனையங்களாக உள்ளன. சிஎஸ்சி-க்கள் இந்தியாவில் இ-சேவைகளுக்கான அணுகலை மக்களுக்கு வழங்கி, நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
கருத்துகள்