இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா வில்லானேந்தல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரான தலையாரி ஆகியோர் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் வில்லானேந்தல் குரூப் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் வீடு கட்டும் பணிக்காக சௌடு மண் அள்ளுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவியை அணுகியதற்கு அனுமதி வழங்க வேண்டுமானால் தனக்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது. அதில் முதல் தவணையாக ரூபாய்.5 ஆயிரம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரவேல் அது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரனிடம் புகார் கூறியிருக்கிறார். அதன்பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புகார் அளித்தவர் கொண்டு வந்த பணத்தை பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பின் ரூபாய்.5 ஆயிரத்தை அரசு சாட்சி முன்னிலையில் வழங்கி. அதை குமரவேல் எடுத்துக் கொண்டு நேற்று கமுதி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அங்கு கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவியிடம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் தலைவாரியான் கிராம உதவியாளர் வேல்முருகனிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறவே
அதையடுத்து ரூபாய்.5 ஆயிரத்தை வேல்முருகனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை மடக்கிப் பிடித்தார்கள். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி, உதவியாளர் வேல்முருகனை கைது செய்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேசுவரன் ஆகியோரிடமும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் திருட்டு நடந்த கமுதி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரான தலையாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கருத்துகள்