பிஐஎஸ் மதுரை கிளை நடத்திய அறிவியல் கற்றல் குறித்த இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி முகாம்
இந்திய தரநிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மதுரை கிளை, 2024 ஜூன் 18 மற்றும் 19 தேதிகளில் மதுரையில் உள்ள ஹோட்டல் வெஷ்டர்ன் பார்க்கில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்களின் அறிவியல் ஆசிரியர்களுக்கான தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல் குறித்த உறைவிடப் பயிற்சி முகாமை நடத்தியது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 65 அறிவியல் ஆசிரியர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
பிஐஎஸ் மதுரை அலுவலகத்தில் மூத்த இயக்குநர் திரு சு.த.தயானந்த், நிகழ்ச்சி நோக்கங்களை வழங்கினார். அவர் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்பின் அறிவியல் ஆசிரியர்களுடன் உரையாடி, நமது அன்றாட வாழ்வில் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கே.கார்த்திகா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடக்கவுரையாற்றினார். மாணவர்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் இந்தப் பயிற்சி திட்டத்தில் ஆசிரியர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், அவர் தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றலின் கீழ், பிஐஎஸ் 52 பாடத் திட்டங்களை தொகுத்துள்ளது என்பதை அறிவித்தார், ஆசிரியர்கள் இந்தத் திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்து, அவர்களின் கற்பித்தல் நடைமுறைகளில் அறிவியல் அணுகுமுறையைப் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினார்.
பயிற்சியின் முதல் நாளில், பிஐஎஸ்-ன் முக்கிய செயல்பாடுகள், பிஐஎஸ் கேர் செயலியின் அம்சங்கள், தரநிலைகளுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள், ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள், நோக்குநிலை விளக்கக்காட்சி, கல்வியாளர்களுடன் ஈடுபாடு, தரம் மற்றும் தரநிலைகளை மேம்படுத்துவதில் அறிவியல் ஆசிரியர்களின் பங்கு, அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அறிவியல் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
இரண்டாம் நாளில், பங்கேற்பாளர்கள் மதுரையில் உள்ள சிப்பெட் ஆய்வகத்திற்குச் சென்று, உற்பத்தி பொருட்களுக்கான சோதனை நடைமுறைகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகளை கற்றறிந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிஐஎஸ், 2021 முதல் இந்தியாவின் கல்வி நிறுவனங்ககளில் 10,000 ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்களை உருவாக்கியுள்ளது, இதில் தென் தமிழகத்தில் மட்டும் 342 கிளப்புகள் உள்ளன. இந்த கிளப்புகள், பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகளால், மாணவர்களிடையே தரமான விழிப்புணர்வு கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பிஐஎஸ் வழங்கும் நிதி உதவி மூலம் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்கள், விழிப்பான நுகர்வோர்களாக மாணவர்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பிஐஎஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்களை நிறுவ ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள் பிஐஎஸ் மதுரை அலுவலகத்தை அணுகவும் அல்லது கூடுதல் தகவலுக்கு mdbo-bis@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்
கருத்துகள்