உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல நிதி உதவி வழங்கும் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையை பிரதமரின் உழவர் நல நிதி உதவித் திட்டத்தின் 17-வது தவணைத் தொகையாகப் பிரதமர் விடுவித்தார்
சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 30,000-க்கும் மேற்பட்ட மகளிருக்கு 'வேளாண் தோழிகள்' சான்றிதழ்களை வழங்கினார்
"காசி மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக என்னை அவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து ஆசீர்வதித்துள்ளனர்"
"உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவது அரிதாகவே நடக்கிறது"
"21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதில், ஒட்டு மொத்த வேளாண் துறைக்குப் பெரும் பங்கு உள்ளது"
"பிரதமரின் உழவர் நல நிதி உதவித் திட்டம், உலகின் மிகப்பெரிய நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாக உருவெடுத்துள்ளது"
"திட்டப் பலன்கள் உரிய பயனாளிகளை முழுமையாகச் சென்றடைய, பிரதமரின் உழவர் நல நிதி உதவித் திட்டத்தில் தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்"
"உலகின் ஒவ்வொருவரின் உணவு மேஜையை
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று (18-06-2024) நடைபெற்ற உழவர் நல நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கும் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, இத்திட்டத்தின் 17-வது தவணைத் தொகையை விடுவித்தார். சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் அவர் விடுவித்தார். நிகழ்ச்சியின் போது, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேளாண் தோழிகள் (கிருஷி சகி) என்ற சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வாரணாசி (காசி) நாடாளுமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, முதல் முறையாக இங்கு வந்திருப்பதாகவும் காசி மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக தம்மைத் தேர்வு செய்ததற்காக அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்போது கங்கை அன்னை கூட தம்மைத் தத்தெடுத்துள்ளது போல தமக்குத் தோன்றுவதாகவும் தாம் காசியைச் சேர்ந்த உள்ளூர்வாசியாக மாறி இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
அண்மையில் முடிவடைந்த 18-வது மக்களவைப் பொதுத் தேர்தல்கள், இந்திய ஜனநாயகத்தின் பரந்து விரிந்த தன்மை, ஜனநாயகத்தின் திறன்கள், அதன் ஆழமான வேர்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தத் தன்மைகளை அந்தத் தேர்தல், உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல்களில் 64 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற பெரிய அளவிலான தேர்தல் வேறு எங்கும் நடைபெறவில்லை என்று கூறினார். மக்கள் பெரிய அளவில் பங்கேற்று வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார். அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டிற்கு தாம் பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியாவில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, அனைத்து ஜி-7 நாடுகளின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது என்றார். ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தேர்தலில் 31 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்களின் பங்களிப்பையும் பிரதமர் எடுத்துரைத்தார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்குச் சமமானது என்று அவர் மேலும் கூறினார். இந்திய ஜனநாயகத்தின் சக்தி ஒட்டுமொத்த உலகையும் ஈர்ப்பது மட்டுமல்லாமல், உலகில் சிறந்த தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று அதனை வெற்றிகரமாக்கியதில் பங்களித்த வாரணாசி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். வாரணாசி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல், நாட்டின் பிரதமரையும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறிய அவர், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை மூன்றாவது முறையாக மீண்டும் பதவியில் அமர்த்துவது சாதனை என்று கூறிய பிரதமர், உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் இது ஒரு அரிய நிகழ்வு என்று குறிப்பிட்டார். இதுபோன்று தொடர்ந்து மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) ஆட்சியில் அமர்வது 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்தது என்று சுட்டிக்காட்டினார். இளைஞர்களின் சக்தியும் அவர்களின் தேவைகளும் அதிகமாக உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், 10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு ஒரு அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவது பெரிய வெற்றி என்று அவர் தெரிவித்தார். இது மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் இந்த நம்பிக்கைதான் தமது மிகப்பெரிய மூலதனம் என்று கூறிய அவர், இது நாட்டைப் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் தம்மை உற்சாகப்படுத்துகிறது என்றார்.
வளர்ந்த இந்தியாவின் தூண்களாக விவசாயிகள், மகளிர் சக்தி, இளைஞர்கள் மற்றும் ஏழைகள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்த நான்கு பிரிவினருக்குத் தாம் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப் போவதாகப் பிரதமர் மீண்டும் உறுதியளித்தார். மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பிறகு இந்த அரசு எடுத்த முதல் முடிவு விவசாயிகள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் நலன் சார்ந்த்தாக அமைந்தது என பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் விவசாயிகளுக்கான நல நிதி உதவித் திட்டத்தில் நிதியை விடுவித்தல், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டுவது போன்ற அரசின் இந்த முடிவுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவும் என்று பிரதமர் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்த விவசாயிகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நிகழ்ச்சியில் இணைந்த விவசாயிகளுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மொத்தம் 20,000 கோடி ரூபாய் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை (லக்பதி தீதி) உருவாக்கும் திட்டத்தில் வேளாண் தோழிகள் (கிருஷி சகி) முன்முயற்சி ஒரு வலுவான நடவடிக்கை என்றும் அவர் கூறினார். இந்த முன்முயற்சி பெண்களுக்கு கௌரவம் மற்றும் வருமான உத்தரவாதத்தை உறுதி செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரின் உழவர் நல நிதி உதவித் திட்டம், உலகின் மிகப்பெரிய நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாக உருவெடுத்துள்ளது என்று கூறிய பிரதமர், இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.3.25 லட்சம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்றார். வாரணாசி பகுதியில் உள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மட்டும் இத்திட்டத்தில் இதுவரை ரூ. 700 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தகுதியான பயனாளிகளுக்கு பலன்களைக் கொண்டு செல்வதில் தொழில்நுட்பம் பயன்படுத்துவதைப் பிரதமர் பாராட்டினார். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள், பிரதமரின் நல நிதி உதவித் திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான லட்சியப் பயணம் உதவியதாக அவர் தெரிவித்தார். பயனாளிகள், திட்டப் பயன்களை அடைவதை உறுதி செய்ய, விதிகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். நோக்கங்களும், நம்பிக்கைகளும் சரியாக இருக்கும்போது, விவசாயிகள் நலன் தொடர்பான பணிகள் விரைவாக நடைபெறும் என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதில் வேளாண் தொழில்துறை அமைப்பின் பங்கு குறித்து பேசிய பிரதமர், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் உலகளாவிய தற்சார்புக்கான அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியா, முன்னணி வேளாண் ஏற்றுமதி நாடாக மாற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த வாரணாசிப் பகுதியின் உள்ளூர் தயாரிப்புகள் உலகளாவிய சந்தையை அடைந்துள்ளன என்றும், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்புத் திட்டம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையங்கள் அமைப்பது ஆகியவற்றின் மூலம் ஏற்றுமதி அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவரது உணவு மேஜையிலும் குறைந்தபட்சம் ஒரு இந்திய உணவுப் பொருளாவது இருக்க வேண்டும் என்பதே தமது கனவு என்று அவர் கூறினார். குறைபாடுகள் இல்லாத மற்றும் சூழல் பாதிப்பு இல்லாத உற்பத்தி என்ற என்ற தாரக மந்திரம் விவசாயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வேளாண் மையங்கள் மூலம் சிறுதானியங்கள், மூலிகைப் பொருட்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒரு பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதிக எண்ணிக்கையில் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், விவசாயத் துறையில் அவர்களின் முக்கியத்துவத்தையும் அவர்கள் இத்துறைக்கு வழங்கி வரும் ஆதரவையும் எடுத்துரைத்தார். இத்துறையில் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மகளிருக்கு ட்ரோன் பயிற்சி வழங்கும் ட்ரோன் சகோதரி திட்டத்தைப் போன்றே வேளாண் தோழிகள் (கிருஷி சகி) திட்டமும் முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆஷா பணியாளர்களாகவும், வங்கி தோழிகளாகவும் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், இனி வேளாண் தோழிகளாகவும் அவர்களின் திறன்களை நாடு காணும் என்று கூறினார். சுய உதவிக் குழுக்களுக்கு 30,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வேளாண் தோழிகள் (கிருஷி சகிஸ்) என்ற பெயரில் வழங்கியதைக் குறிப்பிட்ட பிரதமர், தற்போது 11 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழுக்களை இணைக்கும் என்றார். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதில் இத்திட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
காசி மற்றும் பூர்வாஞ்சல் பகுதி விவசாயிகள் மீது மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுள்ள அக்கறையை எடுத்துரைத்த பிரதமர், பனாஸ் பால் பண்ணை நிறுவனம், வேளாண் சரக்குப் போக்குவரத்து மையம் மற்றும் ஒருங்கிணைந்த பேக்கேஜிங் மையம் ஆகியவை இப்பகுதியில் அமைக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். பனாஸ் நிறுவனம், வாரணாசி (பனாரஸ்) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்குப் பெரிய பயன் அளிப்பதாகத் தெரிவித்தார். தற்போது இந்தப் பால் பண்ணை நிறுவனத்தில் தினமும் சுமார் 3 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கப்படுவதாக அவர் கூறினார். வாரணாசியில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்புக் குடும்பங்கள் இந்தப் பால் பண்ணையில் பதிவு செய்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பனாஸ் நிறுவனம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காசியில் மேலும் 16 ஆயிரம் கால்நடை வளர்ப்பாளர்களைச் சேர்க்க உள்ளது எனவும், பனாஸ் பால் பண்ணையின் வருகைக்குப் பிறகு, பனாரஸ் பகுதி பால் உற்பத்தியாளர்களின் வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மீன் வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிக்க அரசு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் பிரதமர் விளக்கினார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் (மத்ஸ்ய சம்பதா யோஜனா) மற்றும் மீனவர்களுக்கான உழவர் கடன் அட்டைத் திட்டப் பலன்கள் குறித்து அவர் குறிப்பிட்டார். வாரணாசியில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் சந்தெளலியில் நவீன மீன் சந்தை கட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் திட்டம் , வாரணாசியில் திறம்பட செயல்படுத்தப்படுவது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் சுமார் 40 ஆயிரம் உள்ளூர் மக்கள் பதிவு செய்துள்ளதாகவும், 2,500 வீடுகளில் ஏற்கனவே சூரிய சக்தித் தகடுகள் (சோலார் பேனல்) பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 3,000 வீடுகளில் இவற்றை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டம் மின் கட்டணத்தைத் தவிர்ப்பதுடன், கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் பயனாளிகளின் குடும்பங்களுக்கு கூடுதல் வருமானத்தையும் வழங்கி, இரட்டை நன்மையைத் தருவதாக பிரதமர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், வாரணாசியில் நாட்டின் முதலாவது நகர கம்பிவட இழுவை வழித் (ரோப்வே) திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றார். காஸிப்பூர், அசாம்கர் மற்றும் ஜான்பூர் நகரங்களை இணைக்கும் சுற்றுச் சாலை, புல்வாரியா மற்றும் சௌகாகாட் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார். காசிக்கு புதிய தோற்றம் அளிக்க பல மேம்பாட்டுத் திட்டங்கள், வாரணாசி மற்றும் கண்டோன்மென்ட் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை எளிதாக்க பபத்பூர் விமான நிலையத் திட்டம், கங்கை பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புதிய வசதிகள், நகரின் குளங்கள் புதுப்பிக்கப்பட்டது, வாரணாசியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது போன்ற திட்டங்கள் மற்றும் பணிகள் செயல்படுத்தப்படுவதைப் பிரதமர் எடுத்துரைத்தார். காசியில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிய மைதானம் ஆகியவை இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.
அறிவின் தலைநகரம் என காசி அழைக்கப்படுவதை பிரதமர் நினைவுகூர்ந்தார். நகர்ப்புற வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை, ஒரு பாரம்பரிய நகரம் எவ்வாறு எழுத முடியும் என்பதை முழு உலகிற்கும் கற்பிக்கும் நகரமாக இந்தக் காசி நகரம் மாறியிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தாரக மந்திரம் காசியின் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்றும், இந்த வளர்ச்சி காசிக்கு மட்டும் பயனளிக்காமல் ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கும் பயன் அளிப்பதாகவும் அவர் கூறினார். இப்பகுதி மக்கள் தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்காக காசிக்கு வருகிறார்கள் என்றும், இதன் மூலம் அவர்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். காசி விஸ்வநாதரின் ஆசீர்வாதத்துடன், காசியின் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தடையின்றித் தொடரும் என்று கூறி பிரதமர் திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி, உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மௌரியா, திரு பிரஜேஷ் பதக் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், விவசாயிகள் நலனில் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பிரதமரின் உழவர் நல நிதி உதவித் திட்டத்தின் கீழ் 17-வது தவணையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கும் கோப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி முதலில் கையெழுத்திட்டார். இந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, இத்திட்டத்தின் கீழ் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பிரதமர் இன்று விடுவித்தார். இதுவரை, 11 கோடிக்கும் மேற்பட்ட தகுதியுள்ள விவசாய குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் ரூ.3.04 லட்சம் கோடிக்கு மேல் பலன்களைப் பெற்றுள்ளன.
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேளாண் தோழிகள் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். கிருஷி சகி ஒருங்கிணைப்பு திட்டம், கிராமப்புறப் பெண்களுக்கு வேளாண் தோழிகளாக அதிகாரம் அளிக்கிறது. இதன் மூலம் கிராமப்புற இந்தியாவை சிறப்பானதாக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் தோழிகளுக்கு துணை விரிவாக்கப் பணியாளர்களாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
கருத்துகள்