பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு நடக்கும்
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதுமுள்ள ஏழை மக்களுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டித்தர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதி அளித்து உதவும் வகையில் கடந்த 2015 - 16 ஆம் ஆண்டு முதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் தகுதி வாய்ந்த மக்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இதுவரை 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, எரிவாயு (எல்பிஜி) இணைப்பு, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளுடன் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், இத்திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்ற பிறகு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.
தற்போது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்