UGC-NET தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யுஜிசி நெட் தேர்வில் கார்பன் காப்பி இல்லாமல் ஓஎம்ஆர் சீட் தேர்வு முறை குறித்து தேர்வு எழுதுவோர் அச்சம்
யுஜிசி நெட் தேர்வு ஓஎம்ஆர் (OMR) சீட் முறையில் இதுவரை நடைபெற்றது. தற்போது கார்பன் காப்பி இல்லாமல் வழங்கப்பட்டதால் இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான தேர்வு மையமாக திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி செயல்பட்டதில் 2 ஷிப்ட்டாக நடந்த தேர்வை 3600 நபர்கள் எழுதினர்.
சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இந்த முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றுள்ளது. ஓஎம்ஆர் சீட்டில் விடைகளைக் குறிக்க தேர்வு முகமை சார்பில் வழங்கப்பட்ட பால் பாயிண்ட் பேனா மிகவும் தரமற்றதாக இருந்ததாகவும், அதைக் கொண்டு விடையை ஷேட் செய்வதற்கு காலம் கடந்து விட்டதாகத் தேர்வர்களில் பலர் குற்றச்சாட்டினர். ஓஎம்ஆர் சீட் கார்பன் காப்பி இல்லாமல் வழங்கப்பட்டதால் இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது பலவிதமான சந்தேகங்கள் எழுவதாகவும் தேர்வர்கள் புகார் கூறினார்கள். தவிர புத்தனாம்பட்டி தேர்வு மையத்தில் தேர்வறைகள் நெருக்கடியாக இருந்ததுடன். மின் விசிறிகள் பல செயல்படவில்லை. கல்லூரி வளாகம் அருகே உணவகம் எதுவும் இல்லாததால் தேர்வர்கள் மற்றும் உடன் வந்தவர்கள் 12 கி.மீ தொலைவில் உள்ள துறையூருக்கு சென்று சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகரிலும் தேர்வர்கள் மிக எளிதாக வந்து செல்ல வசதியாக முக்கிய சாலைகளை ஒட்டி பல்வேறு வசதிகள் கொண்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளநிலையில், வசதிகளற்ற கிராமப்பகுதியில் பல மாவட்டங்களுக்கான தேர்வு மையமாக இந்த மையத்தைத் தேர்வு செய்தது ஏன் என்றும் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் UGC NET 2024 தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு: ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற UGC NET 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேர்வில், நேர்மைத்தன்மை சமரசம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து UGC-NET தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்வு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் கணினி முறையில் இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பல்வேறு தினங்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வு நடந்த நிலையில், தற்போது 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நெட் தேர்வு நடைபெறுகிறது
2024 ஆம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான நெட் தேர்வு ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், நடைபெற்ற தேர்வில், நேர்மைத்தன்மை இல்லை என்பதால் UGC-NET தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு எதுவும், தற்போது வரை வெளியாகவில்லை.
கருத்துகள்