விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
பாமக வேட்பாளர் இரண்டாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று ஜாமீன் தொகையை இழந்தார். திமுக வேட்பாளரின் வெற்றியை தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் மொத்தம் 21வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார்.
பாமக வேட்பாளர் 56,296 வாக்குகள் பெற்று தோல்வியைச் சந்தித்தார். நாம் தமிழர் கட்சி சித்த மருத்துவர் அபிநயா 10,602 வாக்குகளை பெற்று ஜாமீன் தொகையை இழந்தார். அவருடன் போட்டியில் இருந்த 26 வேட்பாளர்களும் ஜாமீன் தொகையை இழந்தனர். திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 67,757 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் திமுக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது அமைச்சர் டாக்டர் கே.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்டப் பொறுப்பாளர் கவுதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடுகையில் திமுக கூட்டணிக்கு சுமார் 52 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளதும், கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து திமுகவின் கூட்டணி விக்கிரவாண்டியைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. வெற்றியை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
கருத்துகள்