அமெரிக்க- இந்திய வர்த்தக கவுன்சிலின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தது
அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சிலின் தூதுக்குழு, அதன் செயல் துணைத் தலைவர் திரு எட்வர்ட் நைட் தலைமையில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று புதுதில்லியில் சந்தித்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தது.
இக்குழு இரு நாடுகளிலும் உள்ள தொழில் துறையினருக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இது சுமார் 200 நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்டுள்ளது. அவற்றில் 70 சதவீதம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களாகவும், 30 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவையாகவும் உள்ளன.
இந்த சந்திப்பின் போது பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இந்தியா சிறந்த முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார். முக்கிய உலோகங்கள், குறைக்கடத்திகள் உள்ளிட்ட தொழில் துறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கலம் (பேட்டரி) பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் கூட்டுத் தொழில் திட்டங்களை செயல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியா நல்ல முன்னேற்றத்தை எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 4,000-க்கும் அதிகமான உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது என்றும் இவற்றின் வர்த்தகம் 140 பில்லியன் டாலரை எட்டியுள்ளது எனவும் அவர் எடுத்துரைத்தார்.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் அபய் கரண்டிகர் உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள்