புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நிறுத்தம் : மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ரயில் சேவை இயக்ககம், கோவை- மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையை போத்தனூர் வரை நீட்டிக்கவும், கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சாமல்பட்டியில் புதிய ரயில் நிறுத்தம் ஏற்படுத்தவும், மைசூரு- மயிலாடுதுறை எக்ஸ்பிரசை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், தற்போது வாரம் 5 நாட்கள் இயக்கப்படும் மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 8.20 மணிக்கு, பகல் 13.05-க்கும் புறப்பட்டு கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரயில்கள் போத்தனூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்படுகிறது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிறு தவிர பிற நாட்களில் இயக்கப்பட்டு வந்த ரயிலும் இனி போத்தனூரிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் போக்குவரத்தின் முதலாவது சிறப்பு ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் 2024 ஜூலை 19 காலை 10.55 மணி மேட்டுப்பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ ராசா, சட்டமன்ற உறுப்பினர்
திரு ஏ கே செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி இ மகரிபா பர்வின் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயில், 2024 ஜூலை 20 முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 22.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 19.35 மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் திங்கட்கிழமை காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
மேலும் கோவை- திருப்பதி ரயிலுக்கு சாமல்பட்டியில் வழங்கப்பட்டுள்ள புதிய நிறுத்தம் வரும் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்ட சேவையையும் அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்திலிருந்து 19-ம் தேதி காலை 10.55 மணிக்கு காணொளி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
கருத்துகள்