பொதுமக்களின் குறைகளுக்கு 21 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
பொதுமக்களின் குறைகளுக்கு 21 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் வேண்டும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட் டுள்ளது.
குறைகளைத் தீர்க்குமாறு கோரிக்கை அல்லது புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போதுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களின் குறை தீர்ப்புக்கு கால அவகாசத்தை 21 நாட்களாக குறைத்தல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இனி இந்தப் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது www.pgportal.gov.in என்ற பெயரில் இணைய வழி குறைதீர்ப்பு மனுக்களுக்கான தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை பொதுமக்கள் அணுகி தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். ஒற்றைச் சாளர முறையில் இந்தக் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்.
மேலும் குறைகளைத் தீர்க்க தற்போது பின்பற்றப்பட்டு வரும் 30 நாட்கள் கால அவகாசத்தை 21 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக தங்களது குறைகளைப் பதிவிட முடியும். அந்த அளவுக்கு பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இணையதளம் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
21 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்டவருக்கு இடைக்காலப் பதிலை சம்பந்தப்பட்ட துறையோ அல்லது அது சார்ந்த நிர்வாகமோ பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை (DARPG) தெரிவித்துள்ளது.
மேலும் குறைகள் தீர்க்கப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு தொலைபேசி எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக அனுப்பவேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்டவரிடமிருந்து குறைகள் தீர்க்கப்பட்ட தற்கான பதிலையும், அவரது கருத்துகளையும் பெறவேண்டும் என்றும், ஒருவேளை குறை தீர்ப்பு விஷயத்தில் சம்பந்தப்பட்டவர் திருப்தி அடையவில்லையென்றால் அவர்கள் மீண்டும் கோரிக்கை மனுவை துறையின் மூத்த அலுவலருக்கு அனுப்பலாம் என்றும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் குறைதீர்ப்புக்காக நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை உடனடியாகவும், நியாயமாகவும், திறமையாகவும் நிவர்த்தி செய்வார்கள்.
மேலும், ஒரு துறைக்கு கோரிக்கை மனு வரும்போது, அது தங்கள் அமைச்சகம், துறை, அலுவலகம் தொடர்பானது அல்ல என்று குறிப்பிடக்கூடாது. மேலும் அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது அலுவலருக்கோ மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள மனுக்களை கண்காணித்தல், திறமையான வகையில் மனுக்களைப் பிரித்தல், செயல்முறை மற்றும் கொள்கை மேம்பாடுகளுக்கான கருத்துகளை ஆய்வு செய்தல், பிரச்சினைக்கான மூல காரணத்தை ஆராய்தல், புகார்களின் மாதாந்திர தகவல் தொகுப்புகளைத் தயார் செய்தல் ஆகியவை நோடல் அதிகாரிகளின் பொறுப்புகளாக இருக்கும்.
குறைதீர்ப்பு மையங்கள்: மேலும் ஒவ்வொரு அமைச்சகம், துறைகளின் சார்பில் முழுமையாக செயல்படும் வகையில், போதிய ஆள் பலத்துடன் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை (DARPG) தெரிவித்துள்ளது.
கருத்துகள்