மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவாண்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் மெபெட்ரோன் எனும் போதைப்பொருள் தயாரித்த இரண்டு பேரைக் குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து ரூபாய். 800 கோடி மதிப்பிலான 792 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ குஜராத்தின் சூரத் மாவட்டம், பல்சானா தாலுகாவின் கரேலி கிராமத்தில் அமைந்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் மெபெட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலையை குஜராத் காவல்துறை கண்டுபிடித்தது. அதில் ரூபாய். 750 கோடி மதிப்பிலான திடநிலையிலான மெபெட்ரோன் மற்றும் ரூ. 51.409 கோடி மதிப்பிலான 31.409 கிலோ திரவ மெபெட்ரோன் ஆகியவை இருந்துள்ளன. அவை மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது யூனுஸ், முகமது அடீல் ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையில் முகமது யூனுஸ், முகமது அடீல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முகமது யூனுஸ் துபாயிலிருந்து தங்கம், எலக்ட்ரானிக் பொருள்களை கடத்தி வந்து இந்தியாவில் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகமது யூனுஸ், முகமது அடீல் ஆகியோர் கடந்த 8 முதல் 9 மாதங்களாக மகாராஷ்டிரத்தின் பிவாண்டி, நாடி நாகாவில் உள்ள மன்சோவின் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதிலிருந்து சட்டவிரோதமாக மெபெட்ரோன் தயாரித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்