ககன்யான் மிஷன்.. விண்வெளி வீரர்களின் உயிரை காக்கும் செயற்கைக்கோள் வெற்றியாக விண்வெளியில் செலுத்தப்பட்டது !
விரைவில் இந்தியா சொந்தமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்புக்காக இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட்டை இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது உலக சாதனை. ஆனால் அதைவிட முக்கியமாக, இது சாமானிய மக்களுக்கும் அறிவியல் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் செயலாகும்.
கால காலமாக விண்வெளிப் பயணங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும்போது இந்தியாவில் அது பேசுபொருளாக மட்டுமே மாறுகிற நிலையில், நாட்டின் சொந்த முயற்சியாக இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளும் தீவிரமாகவே நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து நான்கு வீரர்கள் விண்வெளிக்குப் பறப்பார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்பு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் விண்வெளிக்குப் பறந்திருக்கிறார்கள். 1982 ஆம் ஆண்டு ரஷ்யா சல்யூட் 7 எனும் விண்வெளி நிலையத்தை ஏவியிருந்தது. அதற்கு மூன்றாம் தர நாடுகளிலிருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி இந்தியாவிலிருந்தும் விமானப்படையின் போர் விமானி ராகேஷ் சர்மா 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இன்று வரை இந்தியா சார்பில் விண்வெளிக்குப் பறந்த ஒரே விண்வெளி இந்தியர் இவர் மட்டுமே தான்.
கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வி்ண்வெளிக்குப் பறந்திருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியினராகவும், அமெரிக்காவின் நாசாவுக்காக விண்வெளிக்கு பறந்தவர்களாகவும் பார்க்கப்படும் நிலையில் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்து இந்தியாவுக்காக விண்வெளியில் இந்தியர்கள் நான்கு பேர் ககன்யான் திட்டத்தின் மூலம் பறக்க இருப்பது பெரிய எதிர்பார்ப்பை இப்போது ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் பயணத்தில் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பைப் மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில், பிரத்யேக செயற்கைக் கோளை இன்று இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இன்று காலை 9.17 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்வெளிக்கு SSLV ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது முறை மட்டுமே இந்த மிஷன் வெற்றியடைந்திருக்கிறது.
அந்த வகையில் SSLVக்கு இது மூன்றாவது பயணமாகும். இருப்பினும் இந்த முறை தோல்வி ஏற்படாமலிருக்க 21 புதிய தொழில்நுட்பங்களை ராக்கெட்டில் இஸ்ரோ கொண்டு வந்திருக்கிறது. இந்த ராக்கெட் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் எஸ்ஆர்-0 டெமோ சாட்-ஐயும், 175 கிலோ எடையுள்ள ஈஓஎஸ்-8 செயற்கைக்கோளையும் விண்ணுக்கு கொண்டு செல்கிறது. இதில் ஈஓஎஸ்-8 செயற்கைக்கோளின் பணிகள் மிகவும் முக்கியமானதாகும்.
அதாவது, இந்த செயற்கைகோளில் புற ஊதாக்கதிர்களை அளவிட்டு ஆய்வு செய்யும் கருவி இருக்கிறது. விண்வெளியில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம். எனவே, இது விண்வெளிக்கு செல்லும் ககண்யான் வீரர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. எனவே தான் முன்னெச்சரிக்கையாக இந்த செயற்கைகோளை இஸ்ரோ அனுப்புகிறது. இந்த செயற்கைக்கோளின் ஆய்வுகளின் அடிப்படையில் ககன்யான் வீரர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்