ஆன்லைன் மூலம் பதிவு செய்த வாரிசு சான்றிதழுக்கு ரூபாய்.15,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாளக்குடி நாராயணசாமி மகன் ரத்தினகுமார். என்பவரது மனைவி தேவியின் தந்தை ரவிச்சந்திரன் 2002 - ஆம் ஆண்டு காலமான. நிலையில், அவரது இறப்புச் சான்றிதழ் படி அவர் பெயரில் உள்ள சொத்துகளை பெயர் மாற்றம் செய்து பின்னர் விற்பதற்காக ரவிச்சந்திரனுக்கு வாரிசுகள் இவர்கள் என விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கும் படி திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.8.2024 ஆம் தேதியன்று விண்ணப்பம் செய்தார்.
மறைந்த ரவிச்சந்திரன் வசித்த திருச்சிராப்பள்ளி பீமநகர் பகுதிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்று ஒரு வார காலம் கடந்தும் எந்த விதமான தகவலும் கிடைக்கப் பெறாதால் இரத்தினகுமார் அன்று மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தனக்கும் மற்ற அலுவலர்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,000 ரூபாய் கொடுத்தால் தான் உடனடியாகத் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத இரத்தினகுமார் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது எனக் கூறியதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், 'உங்களது மனுவை மேல் நடவடிக்கைக்கு அனுப்பி விடுகிறேன். அதற்காக எனக்கு மட்டும் தனியாக ரூபாய்.3,000 கொடுத்து விடுங்கள்' என்றுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினகுமார் திருச்சிராப்பள்ளி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனை சந்தித்து புகார் அளித்ததன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரத்தினகுமாருக்கு அளித்த ஆலோசனையின்படி ரத்தினகுமார் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரிடம் பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய்.3,000 பணத்தை லஞ்சமாகக் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர்
பணம் வாங்கிய கையுடன் பிடித்தனர். அதோடு, கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தமது தாலுகா அலுவலர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என முதலில் ரூபாய்.15,000 கேட்டது தொடர்பான மேல் விசாரணையை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகிலுள்ள வட்டாட்சியர் மேற்கு அலுவலகத்தில் வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.
கருத்துகள்