தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப் படி போக்குவரத்து விதிகள் கூறும் தமிழ்நாடு (TN) பதிவெண்களைக் கொண்ட ஆம்னிப் பேருந்துகளைத் தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்க வேண்டும்.
ஆனால், புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் நாகலாந்து என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண்களைக் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருவதை நாம் அன்றாடம் காணலாம். இந்த விதிமீறலால், தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்புகள் ஏற்படுகிறது. அதனால் தான், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை, தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்ற வேண்டும் என்றும், வெளிமாநில பதிவெண்களைக் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழ்நாட்டில் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.ஆனாலும், அரசின் உத்தரவை மதிக்காமல் பல ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்படுகிறது வெளிமாநில பதிவெண்கள் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உள்ளூர் பதிவெண்களில், புது சர்ச்சையும் தற்போது கிளம்பியுள்ளது. அதாவது, ஒரே பதிவெண்களில் நான்கு ஆம்னிப் பேரூந்துகளை இயக்கியிருப்பதாக புகார் வந்துள்ளது.
மதுரையிலிருந்து, தனியார் சொகுசு ஆம்னிப் பேருந்து ஒன்று, 23 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்குப் பயணித்தது. சுரேஷ் என்பவர் இந்தப் பேருந்தை ஓட்டிச் சென்றார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது.
அப்போது, அந்த பேரூந்தில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட்டேக், இன்னொரு பேரூந்துக்கும் பயன்படுத்தப்பட்டதை கண்டு அங்கு பணியிலிருந்த ஊழியருக்குச் சந்தேகம் எழுந்ததனால், உடனடியாக, பேரூந்தை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடி அலுவலர்களுக்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.வரதன் ஏர் டிராவல்ஸ் என்ற அந்தப் பேருந்து, புதுச்சேரி பதிவெண் கொண்டது.. ஆனால், மற்றொரு பேருந்தின் பாஸ்டேக்கை தவறாகப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே பதிவு எண்ணில் 4 பேரூந்துகளை மாற்றி மாற்றி ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சாலை வரி கட்டாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரே பேரூந்தின் ஆவணத்தை, நான்கு பேரூந்தூகளுக்கும் பயன்படுத்தியது உறுதியானது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் பல லட்சம் ரூபாயையும் மோசடி செய்திருக்கிறது.ஒரே பதிவெண்ணில் நான்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வந்துள்ளது தற்போது கவனத்தில் வந்துள்ளது, இதுபோல் இன்னும் எத்தனை இடங்களில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரியாததால், அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வலுக்கத் துவங்கியிருக்கிறது.இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் "ஒரே பதிவெண்ணில் இயக்கிய நான்கு தனியார் சொகுசுப் பேரூந்து உரிமையாளர் புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர் மீது ஒரே பதிவெண்ணில் நான்கு பேரூந்துகளை இயக்கி, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்