சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சித் தலைவர் வீட்டு வரி விதிப்புக்கு ரூபாய்.5,000 லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் அவரது கணவர் உட்பட மூவரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோஸ்பின் மேரி. இவர் தலைவராக இருப்பதால் அவரது அதிகாரத்தை இவரது கணவர் அருள்ராஜ் பயன்படுத்தி வந்தார் இவர் போல பல ஊர்களில் இதே நிலை தான் உள்ளது, ஊராட்சி மன்றத் தலைவர் வேலைகள் செய்வது போல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் (வயது 46) என்பவர் தன்னுடைய வீட்டுக்கு புதிதாக வரி விதிப்பு ஏற்படுத்துவதற்காக அருள்ராஜை அணுகியுள்ளார். அவர், வீட்டு வரி விதிக்க முதலில் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
பின்னர் ரூபாய்.5 ஆயிரமாகக் குறைத்துக் கொண்டார். எனினும் லஞ்சம் தர விருப்பமில்லாத காளீஸ்வரன், இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜோஸ்பின் மேரியிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவரோ, தனது கணவர் கேட்கும் பணத்தைக் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரன், அது குறித்து சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார்.
அவர்களது ஆலோசனைப்படி பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணத்தை நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்த அருள்ராஜிடம் கொடுத்துள்ளார் காளீஸ்வரன். அவர் அந்தப் பணத்தை தனது உதவியாளர் குமாரிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். அதன் படி குமாரிடம் காளீஸ்வரன் பணத்தைக் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ, ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் அருள்ராஜ், குமார் ஆகிய இருவரையும் லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
அத்துடன், வேறொரு நிகழ்ச்சியில் திருமண மண்டபம் ஒன்றில் இருந்த ஜோஸ்பின் மேரியையும் கைது செய்தனர். ஒரே நேரத்தில், லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர், அவரது கணவர், மற்றும் கணவரின் உதவியாளர் ஆகியோர கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
கருத்துகள்