போலியான காவல்துறை அலுவலர்கள், போலியான சி.பி.ஐ., அலுவலர்கள், போலியான அமலாக்கத்துறை அலுவலர்கள் பற்றி இதுவரை பல தகவல்கள் நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில்
காவல்துறை அலுவலர் எனக் கூறி ஆன்லைனில் மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகமாக நடந்து வரும் நிலையில். சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரு கும்பல் போலியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையைத் துவங்கி நடத்தியது தான் மோசடியில் உச்சம்.
சத்தீஷ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் சபோரா கிராமத்தில் இந்த போலியான வங்கிக் கிளை திறக்கப்பட்டுச் செயல்பட்டு வந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக வங்கிக் கிளை செயல்படுவது குறித்து அருகிலுள்ள தப்ரா கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளருக்குத் தகவல் கிடைத்தது. உடன் தமக்குத் தெரியாமல் எப்படி புதிய கிளை உருவானதென்று அவருக்குச் சந்தேகம் வரவே அது தொடர்பான உயர் அலுவலர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கும் அது குறித்துத் சரியாகத் தெரியாததனால், அது குறித்து வங்கி உயர் அலுவலர்கள் நடத்திய விசாரணையில் சபோரா கிராமத்தில் செயல்படும் வங்கிக் கிளை போலியானது எனத் தெரிந்து. உடனே காவல்துறை மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிளைக்கு நேரில் சென்ற போது ஒரு வங்கிக் கிளை எப்படி இருக்க வேண்டுமோ அதே போன்று மிகவும் பொருத்தமாக அமைத்திருந்தனர். பணம் செலுத்தும் கௌண்டர், அறிவிப்புப் பலகை என அனைத்தும் சரியாகச் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கிளை மேலாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவரிடம் விசாரித்த போது வங்கிக் கிளை எண் கூட அறிந்திருக்கவில்லை.
அங்கு பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பணி நியமன உத்தரவு கொடுத்துள்ளனர். பணி நியமன உத்தரவு கூட அசலாகவே இருந்தது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி கூட கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. (தானா சேர்ந்த கூட்டம் திரைப்படக் கதை போல) ரேகா சாஹு, மந்திர் தாஸ் மற்றும் பங்கஜ் உட்பட 4 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தனர் வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் தலா ரூ.2 லட்சம் முதல் 6 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர். வேலையில்லாதவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை ஒரே நாளில் இக்கிராமத்திற்கு வந்திருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் எஸ்.பி.ஐ., வங்கி பணம் வசூலிக்கும் மையத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தார். அவர் திடீரென வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வங்கிக்குச் சென்று வங்கியில் பணியாற்றியவர்களிடம் வங்கிக் கிளை எண் உட்பட சில தகவல்களைக் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர்கள் சரியாகப் பதில் தரவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு, இதனால் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அது குறித்து அருகிலுள்ள தப்ரா ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்குத் தகவல் கொடுத்தார். வங்கி செயல்பட்ட அலுவலகத்தை மோசடி கும்பல், மாதம் 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். போலியான கிளையில் பணம் கட்டி வேலைக்குச் சேர்ந்திருந்த சங்கீதா என்பவர் கூறுகையில், "எனக்கு வேலை கொடுக்க 5 லட்சம் கேட்டார்கள். ஆனால் என்னிடம் அந்த அளவுக்குப் பணமில்லை என்று சொன்னேன். எனவே என்னிடம் ரூபாய்.2.5 லட்சத்தை வாங்கிக் கொண்டு மாதம் 30 முதல் 35 ஆயிரம் வரை சம்பளம் கொடுப்பதாகக் கூறி வேலைக்குச் சேர்த்தனர்'' என்றார். தங்களது வீட்டிலிருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் கட்டி அவர் போலவே 6 பேர் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். போலியான வங்கி தொடங்கப்பட்டு 10 நாட்களில் பிடிபட்டதால் பொதுமக்கள் வங்கியில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்யாமல் இருந்தனர். அதிக நாள்கள் போலியான கிளை செயல்பட்டிருந்தால் பெரிய அளவில் பணமோசடிகள் நடந்திருக்கலாம்.
கருத்துகள்