ஹரியானா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களுக்கு 15-வது நிதி ஆணைய மானியம் விடுவிப்பு
ஹரியானா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஹரியானாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையின் ஒரு பகுதியாக ரூ.194.867 கோடி மதிப்புள்ள நிபந்தனையற்ற மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி விடுவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்த மாநிலத்தில் உள்ள 18 தகுதியான மாவட்ட ஊராட்சிகள், 139 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 5911 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது .
திரிபுராவிலுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.31.40 கோடி நிபந்தனையற்ற மானியமாகவும், வரையறுக்கப்பட்ட மானியத்தின் முதல் தவணையாக ரூ.47.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி அனைத்து 1260 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.
மிசோரமுக்கும் நிதி ஆணையம், நிதியை வழங்கியுள்ளது. இது 2022-23 நிதியாண்டின் நிபந்தனையற்ற மானியங்களின் 2-வது தவணையாகும், இதில் ரூ.14.20 கோடி மற்றும் 2022-23 நிதியாண்டின் 2-வது தவணை வரையறுக்கப்பட்ட மானியங்கள் ரூ.21.30 கோடி அடங்கும். இந்த நிதியானது தன்னாட்சி மாவட்ட கவுன்சில் பகுதிகள் உட்பட அனைத்து 834 கிராம சபைகளுக்கும் பகிரப்படும்.
நிபந்தனையுடன் கூடிய மற்றும் நிபந்தனையில்லாத மானியங்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தொன்பது (29) இனங்களின் கீழ், சம்பளம் மற்றும் பிற நிர்வாகச் செலவுகள் நீங்கலாக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் வரையறுக்கப்படாத மானியங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிபந்தனை மானியங்களை (அ) சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல் போன்ற அடிப்படை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம். மேலும் இது வீட்டுக் கழிவுகளின் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு, குறிப்பாக மனித கழிவு மற்றும் மல கசடு மேலாண்மைக்குப் பயன்படுத்தப்படலாம். (ஆ) குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகிய சேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
15-வது நிதி ஆணையத்தின் மானியங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் ஊரக சுயாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின், தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த இந்த முன்முயற்சி, நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பங்கேற்பு ஜனநாயகத்தை ஆதரிக்கிறது.
மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியங்களை விடுவிக்க பரிந்துரைக்கிறது, பின்னர் அவை நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட மானியங்கள் ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளில் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
கருத்துகள்