ரூபாய்.8,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரியத்தின் ஊழியர் கைது
இராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் மேல்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த மோகன். புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, அரக்கோணம் கோட்டம் மின்னல் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் மனப் பணம் செலுத்தி விண்ணப்பித்தார்.
அப்போது, மின்சார வாரியத்தின் போர்மேன் கிருஷ்ணன் (வயது 59) என்பவர், மின் இணைப்பு வழங்க, அரசு கட்டணம் 23,000 ரூபாயை செலுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
அதன்படி, மோகன், தனது தம்பி சற்குணத்திடம் பணத்தைக் கொடுத்து செலுத்தியுள்ளார். இந்த நிலையில், போர்மேன் கிருஷ்ணன் புதிய மின் இணைப்புக்கு, 8,000 ரூபாயை தனக்கு லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
பணத்தைத் தர விரும்பாத சற்குணம், இராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் புகாரளித்தார். அவர்கள் ஆலோசனைப் படி, நேற்று பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய, 8,000 ரூபாயை போர்மேன் கிருஷ்ணனிடம் சற்குணம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், கிருஷ்ணனை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் சோடியம் கார்பனேட்டு கரைசலில் கையை நனைத்து சோதனை செய்த பிறகு, லஞ்சப் பணம் 17,610 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
கருத்துகள்