இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவுப் பகுதி பாம்பனில்
இலங்கைக் கடற்படையினரால் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி பாம்பனில் அணைத்து மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் பெரிதும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் பெண்கள் திடீரெனக் கடலில் இறங்க முற்பட்டனர். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது, இந்தியக் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தெரிவித்து இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்ததுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள் உள்ளிடவும் பொருட்களைச் சேதப்படுத்துவதென அடிக்கடி இலங்கைக் கடற்படையினர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
நேற்று முன்தினம் இராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றும் தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தது குறித்து கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீனவர்கள் ஆக்ரோஷமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பன் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரிதும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மீனவப் பெண்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல் துறையில் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் செல்லும் வாகனங்கள் மண்டபம் பகுதியிலும் தங்கச்சி மடம் பகுதியிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. போராட்டம் செய்த மீனவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர், "உங்கள் கோரிக்கைகளை உடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாயிலாக இலங்கைக்கு கோரிக்கை வைத்து உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்டு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கலைந்து சென்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறை பிடிக்கப்பட்டு இலங்கை புத்தளம் சிறையில் அடைபட்டிருக்கும் நாட்டுப் படகு மீனவர்களின் உறவினர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இருப்பினும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது தான் , மீனவர்களின் உறவினர் சிலர் பாம்பன் பாலத்திற்கு அடியில் கடலுக்குள் இறங்கவும் முயற்சித்னர். போராட்டத்தில் மூன்று மணி நேரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினை அடிக்கடி நிகழும் காரணம் என்ன என்பதை விரிவாக ஒரு அலசல்:- 1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம் சார்பில், United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பை உருவாக்கி உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது. இந்த ஒப்பந்தத்தில், இது வரை, 158 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, கரையிலிருந்து ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ இதில் கட்டுமரத்தில் சென்று மீனவர்கள் மீன் பிடிக்கலாம்.
அடுத்ததாக ஆறு நாட்டிக்கல் மைல், ‘அண்மைக் கடல்.’ இதில் விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன் பின் உள்ளது ‘ஆழிக்கடல்.’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் வெகுவாகக் குறைந்து விட்டது. எனவே தான், கட்டுமரத்தில் செல்லும் மீனவர்கள், அண்மைக்கடலுக்கும், ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள்.
ஒரு நாட்டின் கடல் எல்லையான 12 நாட்டிக்கல் மைல் என்பது, தோராயமாக 22.2 கிலோ மீட்டர்கள் தூரமாகும்.
அந்த எல்லைக்குள்ளே, பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள் செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும்.
மீன்பிடிப் படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் கட்டாயம் பறக்க வேண்டும். கடலோரக் காவல்படையினர், ஒரு நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால், மேலும், 22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சென்று, கண்காணிப்பு, மற்றும் காவல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடலாம். அதற்கு மேல், ‘பொருளாதார எல்லை’ என்ற வரையறை உள்ளது.
அதன்படி, சுமார் 393 கிலோ மீட்டர் வரையிலும் கடலிலுள்ள எல்லா வளங்களும், அதற்கு அருகில் கரையைக் கொண்டுள்ள நாட்டுக்கே சொந்தமாகும்.
மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற உரிமைகளை அந்த நாடு கொண்டு உள்ளது. கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு 1982 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters) என்பது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லையாகும். மேலும் ஒரு நாட்டின் இறையான்மை ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் இது பொருந்தும்.
1982 ஆம் ஆண்டு உருவான UNCLOS (United Nations Convention on the Law of the Sea) என்ற அமைப்பு தான் கடலின் எல்லைகளை வரையறை செய்து சர்வதேச அளவில் ஒழுங்கு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்ததன்படி ஒவ்வொரு நாடும், அதன் கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தை தன் எல்லையாக்கிக் கொள்ளலாம். 12 நாட்டிகல் மைல் என்பது தோராயமாக 22.2 கி.மீ
இப்பொழுது நமது பிரச்சனை இந்தியா-இலங்கைக்கு இடையே உள்ள தூரம் சுமார் 30 கி.மீ. இரண்டு நாட்டின் கடல் எல்லை ஒன்றின் மீது ஒன்றாகவே இருக்கிறது.
சிங்கப்பூர், மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் எல்லையும் அதுபோலத்தான் உள்ளது. ஆனால் அவர்கள் தங்களுக்கு 6.கி.மீ தூரம் போதும் என ஏற்றுக் கொண்டுள்ளன.இது கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த அப்போது இருந்த இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி செய்த செயலால் விளைந்தது! கச்சத் தீவு ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு என்றானதால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவில் பாதி வரை இலங்கைக்குச் சொந்தமானது. இது ஆறு கிலோ மீட்டர்கள் கூட இல்லாததால் இந்திய மீனவர்கள் அடிக்கடி தொல்லைக்கு உள்ளாகின்றனர்.
கச்சத் தீவுக்கருகே மீன் பிடி உரிமை உண்டு என்னும் நிபந்தனையுடன் தான் தாரை வார்க்கப்பட்டாலும், இலங்கை இதனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இலங்கைக் கடற்படையினருக்குப் புரிய வேண்டுமன்றால் காலம்சென்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தது போல இந்தியா கச்சத் தீவை மீட்டெடுப்பதுதான் வழி! ஆனால் யார் அந்தப் பூனைக்கு மணி கட்டுவது ? என்பதே எழுவினா. நமது இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதில் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை இவர்கள் வாழ்க்கை நிலை கீழ் கண்ட திரைப்படப் பாடல் வரிகள் போலவே ... புயல் வீசும் நிலையில். "அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் யாரோ? இங்கே வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு, முடிந்தால் முடியும், தொடர்ந்தால் தொடங்கும். இது தான் எங்கள் வாழ்க்கை, ............ ! தனியாய் வந்தோர் துணிவைத் தவிற துணையாய் வருபவர் யாரோ?ஒருநாள் போவோர் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்.,..... ! ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்..! தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைக் கண்ணீரில் பிழைக்க வைத்தான்......!? இது மீனவப் பெண்களின் அவல நிலையை உணர்த்துகிறது.
கருத்துகள்