தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நியமனம்.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) டெல்லியில் செயல்படுகிறது. தேசிய அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது இதன் பொறுப்புத் தலைவராக விஜய பாரதி சயானி இருக்கிறார். இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமாா் மிஸ்ரா, ஜூன் மாதம் 2021-ஆம் ஆண்டு NHRC -யின் 8-ஆவது தலைவராக நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் ஜூன் மாதம் 1 ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததையடுத்து இந்தப் பொறுப்பு காலியாக உள்ளது. என்எச்ஆா்சி உறுப்பினரான விஜயபாரதி சயானி அதன் தற்காலிகத் தலைவராக பணியாற்றி வருகிறாா். பிரதமா் தலைமையிலான குழு என்எச்ஆா்சி தலைவரை தோ்வு செய்யும்.
இந்தக் குழுவின் உறுப்பினா்களாக மக்களவைத் தலைவா், உள்துறை அமைச்சா், நாடாளுமன்ற மக்களவை எதிா்க்கட்சி தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஆகியோா் உள்ளனா். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணையத்தில் தலைவராக வி.இராமசுப்பிரமணினை தேர்வு செய்த நிலையில்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியனை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வி.ராமசுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மன்னார்குடியில் பிறந்து சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்த பிறகு விவேகானந்தா கல்லுாரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பின்னர் சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.பின்னர் தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டவர், ஹிமாச்சலப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர் ராம.சுப்பிரமணியன். ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் வி.இராமசுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.இங்கு மனித உரிமைகள் முழுமையாக குறட்டை விட்டு உறக்கத்தில் இருக்கும் நிலையில் அந்தக் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராகியுள்ளார்கள்
நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நல்ல இலக்கிய ரசனை கொண்டவர். இராமாயணம், மகாபாரதத்தில் பிரசங்க ஆர்வமுள்ளவர்! இவரது உரை வீச்சுக்கள் மிக சுவாரஷ்யமானது. நாமே சில நேரங்களில் ரசித்துள்ளோம். அதே சமயம் இவர் தன் பதவிக் காலத்தில் மக்களுக்கான நீதிபதியாக வெளிப்பட்டதைவிட அரசு தரப்பிலான நீதிபதியாகத் தான் இருந்துள்ளார் என்பதற்கு இரண்டு உதாரணங்கள்.
முதலில்
அதிரடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வாசலில் வரிசையில் நின்று மயங்கி விழுந்தும், தற்கொலை செய்தும் 150 பேர் இறந்தனர்! எத்தனையோ கோடி பேர் எதிர்காலத்தைத் தொலைத்தனர். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொணாத் துயரமிது! இப்படிப்பட்ட அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அங்கீகரித்தவர் தான் இந்த நீதிபதி வி.இராம சுப்பிரமணியன்.
கருப்புப் பணத்தை ஒழித்தல், பயங்கரவாதத்திற்கு பணம் செல்வதைத் தடுத்தல், ஊழலை ஒழித்தல், பொருளாதாரத்திலுள்ள பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற எதுவுமே சரியாக நடக்கவில்லை.
இந்த அறிவுப் பூர்வமற்ற நடவடிக்கையை சாதனையாகச் சொல்ல இயலாது என்பதால் தான் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பணமதிப்பிழப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியினரோ, பிரதமர் நரேந்திர மோடியோ வாய் திறக்கவில்லை.
’பணமதிப்பிழப்பு நியாயமானது தான்’ என பாரதிய ஜனதா கட்சியினரே சொல்லத் தயங்கிய நேரத்தில் அன்றைய உச்ச நீதிமன்றமோ ’’’ இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் குறைபாடு காண முடியாது’’ என்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகளில் ஒரே ஒரு பெண் நீதிபதியான நாகரெத்தினா மட்டுமே மாறுப்பட்டு, இது அரசின் தவறான முடிவு என்றார். ஆனால் வி.இராமசுப்பிரமணியனோ, அரசாங்கத்திற்கு ’ஆதரவாகத் தீர்ப்பளித்தார். இரண்டாவதாக
கருப்புப் பணப் புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க வழிவகுப்பதோடு ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வரும் கிரிப்டோ கரன்சியை தடை செய்யப்பட வேண்டியது என ரிசர்வு வங்கி கிரிப்டோ கரன்சி குறித்து கூறி வருகிறது. கண்ணுக்குத் தெரியாத எலக்ட்ரானிக் பணமான கிரிப்டோ கரன்ஸியைப் பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடக்கிறது என்பதால் ஆர்.பி.ஐ கிரிப்டோ கரன்சிக்கு தடை விதித்தது.
ஆனால், அந்த கிரிப்டோ கரன்சிக்கு ரிசர்வ் வங்கி போட்ட தடை செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதியும் இந்த வி.ராமசுப்பிரமணியன் தான் .
இந்தத் தீர்ப்புக்கு பிறகு தான் கிரிப்டோ கரன்சியை அங்கீகரித்து அதில் 30 சதவிகித வரி விதிப்பை போட்டது மத்திய நிதி அமைச்சகம்!
இன்னும் இந்த அரசுக்கு சேவை செய்ய விரும்புகிறார் முன்னாள் நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன். ஆகவே, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவே ஆக்கப்பட்டார் ! என் பலரும் விவாதிக்கும் நிலையில்
இனிமேல்
மக்களோட மனித உரிமைகளை காப்பாற்றுவதற்காகத்தான் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதை அரசியல் அறிந்த பலர் ஏற்க மறுக்கும் நிலை உள்ளது. ஆகவேநாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தெரிவித்ததாவது:-தேர்வு குழுவால் பாரபட்சமில்லாமல் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். இந்த நியமனம் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். இதில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஊக்குவிப்பதற்கும், ஒரு கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக, கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள் மற்றும் முன்னோக்குகளைப் புறக்கணித்து, பெயர்களை இறுதி செய்வதற்கு தேர்வு குழு அதன் உறுப்பினர்களின் பெரும்பான்மையை நம்பியுள்ளது. தேர்வு செயல்முறை அடிப்படையில் குறைபாடு உள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் நம்பகத்தன்மை, செயல்திறன் இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளை வரையறுக்கும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை பொறுத்தது. நாங்கள் முன்மொழிந்த பெயர்கள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன மற்றும் ஆணையத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர்.
தலைவர் பதவிக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் ஆகியோரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்மொழிந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்