டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது
டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.; தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசால்
கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதி அளித்து, மேலும் இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று பிரதமரை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமெழுதினார்.
மேலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 ஆம் தேதியன்று ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை மத்திய அரசு தற்போது கைவிட்டுள்ளது.இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுமென்று முதல்-அமைச்சர் உறுதியளித்ததன்படி,
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023-ன் படி 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் போராட்டம் மற்றும் பேரவைத் தீர்மானத்துக்குப் பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது” என அ.வெள்ளாலப்பட்டியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் திட்டத்தைக் கைவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் ஏலத் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவதாக மக்கள் அறிவித்ததைத் தொடர்ந்து மேலூர் பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகள், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை தலைமையில் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டியைச் நேரில் சந்தித்து டங்ஸ்டன் ஏலத் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை வைத்ததையடுத்து, டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. திட்டம் ரத்தானதை மேலூர் பகுதி மக்கள் கொண்டாடினர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னைக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த போது, மேலூர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்துவதாகவும், அதில் பங்கேற்க வேண்டுமென்றும் முதல்வருக்கு விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, அ.வள்ளாலப்பட்டியில் நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. மதுரையிலிருந்துகிராமங்களுக்குச் சென்ற முதல்வரை வழிநெடுகிலும் மக்கள் ஓரமாக வரிசையாக நிறுத்தி வரவேற்பு அளித்தனர். அ.வள்ளாலப்பட்டியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேரிவித்தது: “மத்திய பாஜக அரசு டங்ஸ்டன் ஏலத் திட்டத்தைக் கொண்டுவர முயன்றது. மத்திய அரசு என்னனென்ன கொடுமைகள், அக்கிரமங்கள், மக்கள் விரோதச் செயல்களைச் செய்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே டில்லியில் விவசாயிகள் குளிரிலும், வெயிலிலும் இரண்டாண்டுகளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்தனர். டங்ஸ்டன் ஏலத் திட்டப் போராட்டத்தில் 3 மாதத்தில் வெற்றி கிடைத்துள்ளது. முக்கியமானது. மத்திய அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளதற்கு மக்களான நீங்களும், தமிழ்நாடு அரசும் கொடுத்த கடுமையான எதிர்ப்பும் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது மாபெரும் வெற்றியாகும்.
டங்ஸ்டன் திட்டத்துக்கு மூல காரணம், மாநில அரசின் அனுமதியில்லாமல் முக்கியக் கனிம வளங்களை மத்திய அரசு ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் தான் காரணம். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. எதிர்கட்சியான அதிமுக எதிர்க்கவில்லை. மாநிலங்களவையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, சட்டத்தை ஆதரித்தும், வரவேற்றும் பேசினார். இதுவே டங்ஸ்டன் ஏலத் திட்டத்துக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது. இதையடுத்து டங்ஸ்டன் ஏலத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன். அதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்கப் பார்க்கின்றனர். தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதைத் திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றனர். இந்த எதிர்ப்பை மீறி ஏலம் விட மத்திய அரசு முயன்றதனால் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அரிட்டாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் அனுமதி தரமாட்டார், நிச்சயமாக தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என உறுதியாகத் தெரிவித்தார்.
“டங்ஸ்டன் திட்டம் ரத்து என்பது நமக்குக் கிடைத்த வெற்றி!”
திட்டம் நிறைவேறும் சூழல் வந்தால் முதல்வராக இருக்கமாட்டேன் என ஏன் சொன்னீர்கள் என அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு பதவியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் பிரச்சினை தான் எனக்குப் பெரிது என தெளிவாக கூறினேன். சட்டமன்றப்பேரவைத் தீர்மானம், மக்களின் போராட்டம் காரணமாக திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நேரத்தில் சட்டப் பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் உங்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இது உங்களின் அரசு, உங்களில் ஒருவனாக இருந்து கடமைகளை நிறைவேற்றுவேன் என தெளிவாக கூறினேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி பதவியேற்றேன். அவர் வழியில் நின்று ஆட்சி செய்து வருகிறேன். இந்த ஆட்சி எங்களுக்கானது அல்ல. உங்களுக்கானது” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக அடிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்“
ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரப்போகுது. அது உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் மக்கள் என்ன முடிவோடு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எது எப்படியிருந்தாலும் உங்களுக்காக நாங்கள், எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இது பெரியார் வழியில் நடக்கும் ஆட்சி. அண்ணா, கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆட்சி. உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களால் ஒருவனாக இருக்கும் ஸ்டாலின் ஆட்சி. என்றைக்கும் ஆதரவு தாருங்கள். உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டங்ஸ்டன்’ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட தமிழ்நாடு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட போட்டியால் யாருக்கு சாதகமாக பேசுவது என அரிட்டாபட்டி கிராம மக்களும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். மதுரையிலிருந்து காரில் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டிக்கு சென்ற முதல்வருக்கு 25 கிலோ மீட்டர். தூரம் மக்கள் சாலையோரம் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். கிராமங்களில் செல்லும்போது மக்கள் பட்டாசு வெடித்து முதல்வரை வரவேற்றனர். வழிநெடுகிலும் முதல்வரை வரவேற்று பதாகைகளை ஒட்டியிருந்தனர். முதல்வர் அரிட்டாபட்டிக்கு வந்ததும் பெண்கள் குலவையிட்டு வரவேற்றனர்.
அரிட்டாபட்டி மந்தைக்கருப்பு திடலுக்கு மாலை 5.55 மணிக்கு வந்த முதல்வர் அங்குள்ள மேடையில் சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அ.வல்லாளபட்டிக்குச் சென்றார். அரிட்டாபட்டியில் பொதுமக்கள் பலர் முதல்வரிடம் மனு அளித்தனர்
அ.வல்லாளபட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு கள்ளழகர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கிய போராட்டக் குழுவினர்.
அ.வல்லாளபட்டியில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பலகாரர்கள் மகாமுனி, சேதுராகவன் ஆகியோர் மக்கள் சார்பில் முதல்வருக்கு கள்ளழகர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே.ஆர். பெரியகருப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்