தமிழ்நாட்டில் தற்போது அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜிக்கு ஊழல் தடுப்புச்சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய போது பல நிபந்தனைகளை விதித்தது.
அந்த நிபந்தனைகள் மீறியதால் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க துறை புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டவிரோதமான பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அலுவலர்கள் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தனர். அதன் காரணமாக அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்த வழக்கில் 472 நாட்கள் சிறையில் இருந்த பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி அவர் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்ற நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி மாதம் 12- ஆம் தேதி நடந்த விசாரணையில் அமைச்சராகத் தொடர விருப்பமா? என செந்தில்பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டுமென அவர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் மாதம் 4- ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே அமலாக்கத் துறை தலைமையகத்தின் இணை இயக்குநர் ஜவாலின் தேஜ்பால் சார்பில் வழக்கறிஞர் அர்விந்த் குமார் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் வழங்கியபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளின் அரசு தரப்பு சாட்சிகளையோ, பாதிக்கப்பட்ட நபர்களையோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது.
ஊழல் வழக்கிலோ, பண மோசடி வழக்கிலோ இவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொண்டால் ஜாமின் ரத்து செய்வதற்கான முகாந்திரமாகக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் அமலாக்கத் துறை தரப்பு முக்கிய சாட்சியான தமிழ்நாடு மாநில தடயவியல் துறை நிபுணர் மணிவண்ணன் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வந்தார். ஆனால் ஜாமீனில் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் மாதம் 26, மற்றும் 30- ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது அவர் ஆஜராகவில்லை. பின்னர் ஆஜரான மணிவண்ணனிடம் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் எவ்வித அர்த்தமும் இல்லாமல் குறுக்கு விசாரணையைச் செய்தனர்.
இதுதவிர மூத்த வழக்கறிஞரை மாற்றிக் கொள்ளும் கோரிக்கையை செந்தில்பாலாஜி முன்வைத்ததுடன், டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களையும் கேட்டு மனு செய்தார். மேற்கண்ட நடவடிக்கைகள் எல்லாம் பண மோசடி வழக்கு விசாரணையை திட்டமிட்டே தாமதப்படுத்தும் செந்தில்பாலாஜியின் முயற்சிகள். நீதிசார் நடைமுறைகளை தெள்ளத்தெளிவாக அவமதிப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
பண மோசடி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, அமலாக்கத்துறை தரப்பு 4-வது சாட்சியிடம் குறுக்கு விசாரணையை ஏதாவது ஒரு காரணம் கூறி 2 மாதங்களுக்கு அவர் தரப்பு இழுத்தடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செந்தில்பாலாஜியின் செயல்பாடு பண மோசடி வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதையும், காலந்தாழ்த்துவதையும் தெளிவாக்குகிறது.
இல்லாத, அற்பக் காரணங்களை முன்வைத்து விசாரணையைத் தள்ளி வைக்கக் கோருவதும், விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க தடங்கல்களை உருவாக்குவதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செந்தில் பாலாஜி மீறியிருப்பது தெளிவாகிறது. எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் மேலும் ஜாமின் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, 'அமைச்சர் பதவியில் இல்லை எனக்கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு எதிரான சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மற்றும் பணமோசடி வழக்குகளில் அரசுப்பணியாளர்கள் சாட்சிகளாக உள்ள நிலையில், அவர் அமைச்சராக பதவியில் நீடிக்க விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தைக் கேட்டு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை மார்ச் மாதம் 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
கருத்துகள்