சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏழு மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டம்
மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைக்கும் ஏழு மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முதல்வர்களும் காணொளி மூலம் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மொழிகள், இனங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடு, உடைகள், உணவுகள் என பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளன. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சியுடன் செயல்பட்டால் தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்" எனக் கூறினார்.
தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்
பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் பிரநிதித்துவத்தை இழக்க நேரிடும். எனவே இதனை கடுமையாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்" என்றார்.
"மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது" எனக் கூறிய மு.க.ஸ்டாலின், இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, அதிகாரம் மற்றும் எதிர்கால நலன்களை உள்ளடக்கியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
''தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தால் சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தை சாதாரணமாகக் கடந்து போகக் கூடாது'' என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு எட்டு இடங்களை இழக்கும் எனக் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்தக் கூட்டம் அவசியம். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளும் ஒரு குழுவை முன்மொழிகிறேன்" என்றார். தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் கேரளா மற்றும் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும்" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலமாக உள்ளதாகக் கூறிய கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன், "எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம். மாநில அரசுகளுடன் அவசியமான உரையாடலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்தன. நாட்டின் நலனுக்காக இவை செயல்படுத்தப்பட்டன. இதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு உள்ளது" எனக் குறிப்பிட்டார். தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பா.ஜ.க நம்மைப் பேசவே விடுவதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். கட்சி வேறுபாடுகளைக் கடந்து போராட வேண்டும். டெல்லியில் இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க வேண்டும்" என்றார்.
"தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்" என பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குறிப்பிட்டார். ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், காணொலிக் காட்சியில் தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், "மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டமாக இது உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படுத்துவதாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது" என்றார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடாது எனவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில்
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதி அறிவிக்க வேண்டும்.
வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுதத் வேண்டும்.
1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே தொடர வேண்டும்.
தெலங்கானா முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பங்கேற்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பொருட்கள் உள்ள பரிசுப்பெட்டிகள் வழங்கப்பட்டன. அதில்
தமிழ்நாட்டின் பிரபல பொருட்களாயன பத்தமடை பாய், கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், ஊட்டி வர்க்கி, தோடர் சால்வை, காஞ்சிபுரம் பட்டு, கொடைக்கானல் பூண்டு, கன்னியாகுமரி கிராம்பு உள்ளிட்ட 8 வகைப் பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு மாநிலத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், " கேரளா முதல்வர், தெலங்கானா முதலமைச்சர், கர்நாடக துணை முதல்வர் என அழைத்து இவர்களின் கற்பனைக்காக, ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என விமர்சித்தார். ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தும், அந்தக்கட்சிகள் பங்கேற்கவில்லை.
கருத்துகள்